சாத்தான்குளம் யூனியனில் அனுமதியின்றி வாக்குச்சாவடிக்குள் நுழைந்தவர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
சாத்தான்குளம் யூனியன் வேலன்புதுக்குளம் வாக்குச்சாவடிக்குள் அனுமதியின்றி நுழைந்தவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2-ம் கட்ட தேர்தல் நேற்று நடந்தது. இதையொட்டி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி, இலுப்பையூரணி பார்வதி உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அங்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 5 பஞ்சாயத்து யூனியன்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்துள்ளது. மேலும் சாத்தான்குளம் யூனியன் வேலன்புதுக்குளம் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 995 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்துள்ளது. எந்த இடத்திலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படவில்லை.
180 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு 82 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மற்ற வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா அமைக்கப்பட்டும், நேரடி ஒளிப்பதிவு செய்ய ஒளிப்பதிவாளர்கள் நியமிக்கப்பட்டும் உள்ளனர்.
மொத்தம் சுமார் 2,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர். வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகளை வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று, அங்குள்ள காப்பு அறையில் பத்திரமாக வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் வெப் கேமரா அமைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். எனவே, அங்கு தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் எழாததால், அந்த வாக்குச்சாவடிக்கான தேர்தல் அலுவலர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்து, அவர்களுக்கு உணவு, தங்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டது.
முதல்கட்ட தேர்தலின்போது, சாத்தான்குளம் யூனியன் வேலன்புதுக்குளம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்யும் இடத்தில் அனுமதியின்றி நுழைந்த 5 பேர் கண்டறியப்பட்டு, அவர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விரைவில் மற்ற 3 பேரும் கைது செய்யப்படுவார்கள்.
மேலும், அந்த வாக்குச்சாவடியின் தலைமை அலுவலரும், பெண் போலீஸ் ஏட்டுவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அந்த வாக்குச்சாவடியில் பணியாற்றிய மற்ற அலுவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
Related Tags :
Next Story