தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்தில் இரவு 8.30 மணிவரை நீடித்த வாக்குப்பதிவு


தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்தில் இரவு 8.30 மணிவரை நீடித்த வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 30 Dec 2019 11:00 PM GMT (Updated: 30 Dec 2019 9:03 PM GMT)

தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் இரவு 8.30 மணிவரை வாக்குப்பதிவு நீடித்தது.

தொட்டியம்,

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு 2-ம் கட்டமாக 8 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. ஆனால், சில ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு முடியும் நேரமான மாலை 5 மணிக்கு மேலும் அதிகமான வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் வரிசையில் ஓட்டுப்போட காத்திருந்தனர். அவர்களுக்கு ‘டோக்கன்’ வழங்கப்பட்டு 5 மணிக்கு மேலும் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டனர்.

உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் சிக்கத்தம்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் மாலை 4.30 மணிக்கு மேல் 50-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஓட்டுப்போட வந்தனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். விவசாயிகள் நிறைந்த பகுதி என்பதால் வேலைமுடிந்து மாலை தாமதமாக ஓட்டுப்போட வாக்குச்சாவடிக்கு வந்தது தெரியவந்தது. இங்கு இறுதியாக 74 சதவீத வாக்குகள் பதிவானது.

இரவு 8.30 மணிவரை நீடிப்பு

இதேபோல் தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்தில் அலகரை ஊராட்சியில் உள்ள 2-வது வார்டு பகுதியான அலகரை மேற்கில் 481 வாக்காளர்களும், 3-வது வார்டுக்கு உட்பட்ட காவேரி நகரில் 420 வாக்காளர்களும் என 901 பேர் உள்ளனர். அரியணாம்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் (எண்:66) 2 வார்டுக்கும் சேர்த்து மாலை 5 மணிவரை 528 வாக்குகளே பதிவானது. மாலை 5 மணிக்கு மேல் அதிகமான வாக்காளர்கள் வந்து ஓட்டுப்போட காத்திருந்தனர். மாலை 5 மணிக்கு மேல் 194 பேருக்கு ‘டோக்கன்’ கொடுக்கப்பட்டு இரவு 8.30 மணிவரை அவர்கள் வரிசையில் நின்று வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் தா.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தும்பலம் வாக்குச்சாவடியில் மாலை 5 மணியை கடந்தும் 100-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றனர். இதையடுத்து வாக்குச்சாவடி கதவுகள் பூட்டப்பட்டன. வாக்குச்சாவடியில் இருந்த வாக்காளர்களுக்கு மட்டும் டோக்கன் கொடுத்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு நீடித்தது.

ஓட்டுப்போட அனுமதி இல்லை

தா.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊரக்கரை ஊராட்சி மன்றத்தை சேர்ந்த பெருகனூர் கிராமத்தில் மாலை 5.05 மணிக்கு 3 வாக்காளர்களை ஒருவர் அழைத்து கொண்டு, வாக்குச்சாவடிக்கு ஓட்டுப்போட வந்தார். அதற்கு வாக்குச்சாவடியில் இருந்த முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த தா.பேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் 3 பேரும் தாமதமாக ஓட்டுப்போட வந்ததை அறிந்து, அவர்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.


Next Story