புத்தாண்டு கொண்டாட்டம் புதுவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் - போலீசார் தீவிர கண்காணிப்பு


புத்தாண்டு கொண்டாட்டம் புதுவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் - போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 30 Dec 2019 11:15 PM GMT (Updated: 30 Dec 2019 9:11 PM GMT)

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி புதுவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

புதுச்சேரி, 

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு நடைபெற உள்ளது. இதற்காக வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் புதுச்சேரியில் வந்து குவிந்துள்ளனர். இதனால் ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் அறைகள் நிரம்பி வழிகின்றன.

புத்தாண்டை அவர்கள் ஓட்டல்களிலும், கடற்கரையிலும் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையொட்டி கடற்கரை பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பரண் அமைத்தும் உயரத்தில் நின்றபடியும் கண்காணித்தனர். கடலுக்குள் யாரும் இறங்கி விடாமல் தடுக்க போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தபடி இருந்தனர்.

கடற்கரை பகுதியில் 50க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது. 3 ஆள் இல்லா விமானங்களும் கடற்கரை பகுதியில் கண்காணித்தபடி இருந்தன.

எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளின் தலைகளாகவே காணப்பட்டன. அவர்களை மகிழ்விக்க கலைஞர்கள் கார்ட்டூன் பொம்மைகள் வேடமணிந்து வலம் வந்து கைகுலுக்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கவர்னர் கிரண்பெடி, போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீசார் கடற்கரை உள்ளிட்ட புத்தாண்டு கொண்டாடும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். கடற்கரை பகுதியில் மது அருந்தவோ, சிகரெட் பிடிக்கவோ கூடாது என அறிவிப்பு வெளியிட வேண்டும் என போலீசாருக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.

புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று அதிகாரிகள் கூட்டத்தை கூட்டினார்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் அருண், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் ராகுல்அல்வால், அகன்ஷா யாதவ், சுற்றுலாத்துறை இயக்குனர் முகமது மன்சூர், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், துணை கலெக்டர்கள் சுதாகர், சக்திவேல், நகராட்சி ஆணையர்கள் கந்தசாமி, சிவக்குமார், மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது சுற்றுலா பயணிகள் சுதந்திரமாக புத்தாண்டை கொண்டாட செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி கேட்டறிந்தார். அவர்களுக்காக செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகள் அவரிடம் விளக்கினார்கள்.

கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புத்தாண்டை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் எந்தவித இடையூறுமின்றி வந்து செல்ல நடவடிக்கை எடுக்க கூறியுள்ளேன். கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை பழைய துறைமுகம், இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் பகுதியில் விட ஏற்பாடு (பார்க்கிங் வசதி) செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து அவர்கள் கடற்கரைக்கு வர பஸ்கள் இயக்கப்படும்.

கடற்கரையில் கூடும் பொதுமக்களின் நடமாட்டம் பறக்கும் கேமரா (ட்ரோன்கள்) மூலம் கண்காணிக்கப்படும். பொதுமக்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்துகொடுக்கப்படும். நள்ளிரவு 1 முதல் 1.30 மணிவரை கடற்கரையில் மக்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

மக்கள் கலைந்து செல்லும்போது 2 சக்கர வாகனங்களில் வேகமாக செல்லக்கூடாது. ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடாமல் தடுக்க பேரிடர் மீட்பு படை, தீயணைப்புத்துறையினர் தயாராக இருப்பார்கள். யாருக்கேனும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அதை சரிசெய்ய மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருப்பார்கள்.

போலீசாரையும் மீறி யாரேனும் கடலுக்குள் செல்வதை தடுக்க கடலோர காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அந்த படையினரின் கப்பல் ஒன்றும் தயாராக இருக்கும்.

ஒயிட் டவுண் பகுதியில் (ஆம்பூர் சாலை, சுப்பையா சாலை, பட்டேல் சாலை, கடற்கரை சாலைக்கு உட்பட்ட பகுதி எந்தவித வாகனமும் அனுமதிக்கப்படாது. இந்த பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருப்பார்கள். கடலுக்குள் இறங்க யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

புதுவை வரும் சுற்றுலா பயணிகளை கண்ணியத்தோடு நடத்த வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை சுற்றுலாத்துறையின் பணியாளர்கள் கண்காணிப்பார்கள்.

இரவு நேரத்தில் நாங்களும் ரோந்து வருவோம். புத்தாண்டை கொண்டாட 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரை கடற்கரையில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான கேளிக்கை வரியை 18 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் புத்தாண்டை பாதுகாப்புடன் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

கூட்டம் முடிந்ததும் கலெக்டர் அருண், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் மற்றும் அதிகாரிகள் கடற்கரைக்கு சென்றனர். அங்கு புத்தாண்டை கொண்டாட செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். மேலும் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

Next Story