ஊரக உள்ளாட்சி தேர்தல்: 6 யூனியன் பகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு - 1,504 பதவிகளுக்கு 4,397 பேர் போட்டி


ஊரக உள்ளாட்சி தேர்தல்: 6 யூனியன் பகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு - 1,504 பதவிகளுக்கு 4,397 பேர் போட்டி
x
தினத்தந்தி 31 Dec 2019 3:45 AM IST (Updated: 31 Dec 2019 3:39 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவு 6 யூனியன் பகுதிகளில் நடைபெற்ற நிலையில் 1,504 பதவி களுக்கு 4,397 பேர் போட்டியிட்டனர்.

விருதுநகர், 

விருதுநகர் மாவட்டத்தில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 5 யூனியன் பகுதியில் கடந்த 27-ந்தேதி நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம், வெம்பகோட்டை, சிவகாசி யூனியன் பகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 73.65 சதவீதம் ஓட்டு பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் 75.87 சதவீதமும், குறைந்தபட்சமாக சிவகாசியில் 69.86 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தது.

2-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி ஆகிய யூனியன் பகுதிகளில் நடைபெற்றது. 10 மாவட்ட வார்டு உறுப்பினர், 97 யூனியன் வார்டு உறுப்பினர், 256 பஞ்சாயத்து தலைவர் பதவியிடம், 1,818 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு என மொத்தம் 2,181 பதவிகளுக்கு 677 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் 1,504 பதவிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு 59 பேரும், பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு 425 பேரும், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 853 பேரும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவியிடத்துக்கு 3,060 பேரும் ஆக மொத்தம் 4397 பேர் களத்தில் போட்டியிட்டனர்.

தேர்தல் நடைபெற்ற 6 யூனியன் பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த 1,116 வாக்குச்சாவடிகளில் 4 லட்சத்து 88 ஆயிரத்து 863 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 9 ஆயிரத்து 171 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணி அமர்த்தப்பட்டு இருந்தனர். பாதுகாப்பு பணியில் 2,146 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். 6 யூனியன் பகுதிகளிலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.

நேற்று காலை 7 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. அருப்புக்கோட்டை யூனியனில் உள்ள வில்லிபத்திரி கிராமத்தில் மட்டும் 6 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குச்சீட்டுகள் தவறுதலாக ஒரே சின்னம் அச்சடிக்கப்பட்டு இருந்ததால் வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 9 மணி அளவில் சராசரியாக 11 சதவீதம் வாக்குபதிவாகி இருந்தது. காரியாபட்டி மற்றும் நரிக்குடி யூனியன் பகுதியில் மட்டும் தொடக்கநிலையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. காலை 11 மணி அளவில் சராசரியாக 26.98 சதவீதம் வாக்குப்பதிவானது.

மந்தமாக இருந்த காரியாபட்டி யூனியன் பகுதியில் 2 மணி நேரத்தில் 25 சதவீதமும், நரிக்குடி யூனியன் பகுதியில் 15 சதவீதமும் வாக்குப்பதிவானது. தொடர்ந்து 6 யூனியன் பகுதிகளிலும் வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்றது. கிராம மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். மதியம் 1 மணி அளவில் சராசரியாக 47 சதவீதம் வாக்குப்பதிவானது. 3 மணி அளவில் 55 சதவீதம் வாக்குகள் பதிவானது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நேரம் முடிந்தாலும் 5 மணிக்குள் வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

கல்லூரணி வாக்குச்சாவடியில் கிராம வார்டு உறுப்பினர்களுக்கான வாக்குச்சீட்டுகள் தவறாக அச்சடிக்கப்பட்டு இருந்ததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. 1 மணி நேரம் பேச்சு வார்த்தைக்கு பின்னர் சின்னங்கள் அடிப்படையில் வாக்களிக்க வாய்ப்பு அளிக்க ஒத்துக்கொண்டதன்பேரில் காலை 8 மணி அளவில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. புல்வாய்கரை, மலைப்பட்டி கிராம வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு செய்யும் போது மை அதிகமாக விழுவதாக புகார் செய்யப்பட்டது.

இதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. இதே போன்று நல்லுக்குறிச்சி, கம்மநாயக்கன்பட்டி ஆகிய கிராம வாக்குச்சாவடிகளிலும் சிறு, சிறு பிரச்சினைகளால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.

நரிக்குடி யூனியன் பகுதியில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் சென்ற வேன் திடீரென பரளச்சி சாலையில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை. இதனால் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நரிக்குடி, திருச்சுழி யூனியன் பகுதிகளில் போலீசாரின் வற்புறுத்தலின் பேரில் கடைகள் அடைக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.

நரிக்குடி யூனியனில் உள்ள கொட்டக்காச்சியேந்தல் பஞ்சாயத்தில் கடந்த காலங்களில் கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் ஐகோர்ட்டு தலையிட்டு கிராம பஞ்சாயத்துக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த பஞ்சாயத்து தலைவர் பதவி ஆதிதிராவிடர் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பஞ்சாயத்துக்கு தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து மேம்பாட்டு பணிகளும் செய்யப்படும் என நீதிமன்ற தலையீட்டின் பேரில் பஞ்சாயத்து தேர்தல் நடத்த தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உறுதி அளித்ததாகவும், ஆனால் எவ்வித மேம்பாடும் செய்யப்படவில்லை என அந்த கிராம மக்கள் புகார் கூறும் நிலை இருந்தது. இம்முறை அந்த கிராம பஞ்சாயத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலுக்கு பின்னராவது தங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.

2-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றபோது பதற்றமானவை என கண்டறியப்பட்ட பகுதியில் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர் கண்ணன் திருச்சுழி, நரிக்குடி யூனியன் பகுதிகளில் வாக்குப்பதிவு நடந்த வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார்.

Next Story