தூத்துக்குடி அருகே தேர்தல் தகராறில் பயங்கரம்: அ.தி.மு.க. தொண்டர் படுகொலை - 5 பேருக்கு அரிவாள் வெட்டு
தூத்துக்குடி அருகே தேர்தல் தகராறில் அ.தி.மு.க. தொண்டர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
ஓட்டப்பிடாரம்,
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட 5 பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு லதா, இளையராஜா, மணி ஆகிய 3 பேர் போட்டியிட்டனர். நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
ஓட்டப்பிடாரம் அருகே மேட்டூரில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியிலும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு காலையில் மந்தமான வாக்குப்பதிவு நடந்தது. மாலை நேரத்தில் வாக்காளர்கள் கூட்டம் அலைமோதியது. மாலை 4.50 மணிக்கு வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் 5 மணிக்கு பிறகும் அதிகமானவர்கள் வரிசையில் நிற்க வாய்ப்பு இருப்பதாக தெரிந்தது.
அப்போது வாக்குச்சாவடியில் இருந்த முகவர்கள் வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்க அறிவுறுத்தினர். இதற்கு முகவர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குச்சாவடியில் இருந்த முகவர்களுக்கு இடையே லேசான சலசலப்பு ஏற்பட்டது.
அதே நேரத்தில் வாக்குச்சாவடிக்கு வந்த ஒருதரப்பு ஆதரவாளரை, அங்கு வெளியே இருந்த மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் வெளியேற்றினர். இதனால் வாக்குச்சாவடிக்கு வெளியில் நின்று கொண்டு இருந்த இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து இருதரப்பினரும் அருகில் இருந்த வீடுகளுக்கு சென்று அரிவாளை எடுத்து வந்து வெட்டினார்கள். இதில் ஒருதரப்பை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் வேட்பாளர் லதாவின் கணவரும், ஓட்டப்பிடாரம் ஐக்கிய வியாபாரிகள் சங்க தலைவருமான மாசானசாமி (வயது 54), அவரது ஆதரவாளர்களான சேசு என்ற சண்முகசுந்தரம் (55), ராமசாமி (45) ஆகிய 3 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
அதேபோல் மற்றொரு தரப்பை சேர்ந்த ஓட்டப்பிடாரம் தி.மு.க. நகர செயலாளர் பச்சைபெருமாள் (55), அவரது மகன் ஜெயமுருகன் (28) ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. உடனடியாக காயம் அடைந்த அவர்கள் 5 பேரையும் அருகில் இருந்தவர்கள் ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இருதரப்பு ஆதரவாளர்களும் ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர்.
அந்த சமயத்தில் ஒருதரப்பினர், அங்கு தனியாக நின்று கொண்டு இருந்த மற்றொரு தரப்பை சேர்ந்த ஓட்டப்பிடாரம் தெற்கு தெருவை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டரான மாரியப்பன் (58) என்பவரை விரட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாரியப்பன் அங்கிருந்து சிறிது தூரம் ஓடினார். அப்போது அவர் தவறி சாலையோரத்தில் கீழே விழுந்தார். அப்போது அவரை விரட்டிச் சென்றவர்கள், அந்த பகுதியில் கிடந்த கல்லை தூக்கி மாரியப்பன் தலையில் போட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இந்த படுகொலை குறித்து தகவல் அறிந்த மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மாரியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த 5 பேரும் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே, ஓட்டப்பிடாரம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.
மேலும், சம்பவம் நடந்த இடத்தை தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், தாசில்தார் ரகு ஆகியோர் பார்வையிட்டனர். இந்த கொலை குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடி அருகே தேர்தல் தகராறில் அ.தி.மு.க. தொண்டர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story