அசோக் சவான், ஆதித்ய தாக்கரே உள்பட 36 புதிய மந்திரிகள் பதவி ஏற்பு - அஜித்பவார் துணை முதல்-மந்திரி ஆனார்
மராட்டியத்தில் அசோக் சவான், ஆதித்ய தாக்கரே உள்பட 36 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர். தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்-மந்திரி ஆனார்.
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி நடந்தது.
இந்த தேர்தலை பா.ஜனதா- சிவசேனா ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் மற்றொரு கூட்டணியாகவும் சந்தித்தன. அக்டோபர் 24-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது.
இதில் பா.ஜனதா 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றன. பெரும்பான்மைக்கும் அதிக இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து மராட்டியத்தில் பா.ஜனதா - சிவசேனா கட்சிகள் மீண்டும் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில் திடீர் திருப்பமாக முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் தலா 2½ ஆண்டுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா உறுதியாக இருந்தது.
இதற்கு பா.ஜனதா சம்மதிக்காததால், கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறியது. மேலும் அந்த கட்சி 54 இடங்களில் வெற்றி பெற்ற தேசியவாத காங்கிரஸ், 44 இடங்களை கைப்பற்றிய காங்கிரசுடன் சேர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்தது.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவருடன் 3 கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் மந்திரி பதவி ஏற்றனர். கொள்கை ரீதியில் முரண்பட்ட கட்சிகள் சேர்ந்து கூட்டணி அரசு அமைத்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் 31 நாட் களுக்கு பிறகு நேற்று மந்திரி சபை விரிவாக்கம் நடந்தது. விதான் பவன் வளாகத்தில் நடந்த இந்த விழாவில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இவர் உள்பட 36 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர்.
இவர்களில் 9 பேர் சிவசேனா கட்சியை சேர்ந்தவர்கள். அதன் கூட்டணி கட்சிகளான கிராந்திகாரி சேத்காரி பக்சாவை சேர்ந்த சங்கர்ராவ் கடக், பிரகார் ஜன்சக்தியை சேர்ந்த பச்சு கதம், சுயேச்சை எம்.எல்.ஏ. ராஜேந்திர பாட்டீல் ஆகியோருக்கும் மந்திரி பதவி வழங்கப்பட்டது.
மேலும் தேசியவாத காங்கிரஸ் சார்பில் 14 பேரும், காங்கிரசை சேர்ந்த 10 பேரும் மந்திரியாக பதவி ஏற்றனர். இவர்களுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
மந்திரி பதவி ஏற்றவர்களில் ஆதித்ய தாக்கரே, அசோக் சவான், வர்ஷா கெய்க்வாட் முக்கியமானவர்கள்.
இதில் ஆதித்ய தாக்கரே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மகன் ஆவார். சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு, ஒர்லி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் சவான் ஏற்கனவே முதல்-மந்திரி பதவி வகித்தவர். ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் குற்றச்சாட்டில், முதல்-மந்திரி பதவியை இழந்து, பின்னாளில் மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். நாடாளுமன்ற தேர்தல் தோல்வி காரணமாக மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய அசோக் சவானுக்கு தற்போது மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் வர்ஷா கெய்க்வாட் மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியில் இருந்து 4-வது தடவையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இந்த மந்திரி சபை விரிவாக்கம் மூலம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மந்திரி சபையில் அவரையும் சேர்த்து 43 பேர் உள்ளனர்.
இதில் சிவசேனா சார்பில் கூட்டணி கட்சிகள், சுயேச்சை உள்பட 15 பேரும், தேசியவாத காங்கிரசை சேர்ந்த 16 பேரும், காங்கிரஸ் கட்சியின் 12 பேரும் மந்திரிகளாக உள்ளனர்.
Related Tags :
Next Story