அடிமாலி, பீர்மேடு பகுதிகளில் தேவாலயங்களில் பணம் திருட்டு


அடிமாலி, பீர்மேடு பகுதிகளில் தேவாலயங்களில் பணம் திருட்டு
x
தினத்தந்தி 1 Jan 2020 3:30 AM IST (Updated: 31 Dec 2019 6:59 PM IST)
t-max-icont-min-icon

அடிமாலி, பீர்மேடு பகுதிகளில் தேவாலயங்களில் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அடிமாலி, 

அடிமாலியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று உள்ளது. கடந்த 29-ந் தேதி இரவு இந்த தேவாலயத்தின் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் தேவாலயத்தின் அலமாரியில் வைத்திருந்த ரூ.75 ஆயிரத்தை திருடி கொண்டு தப்பி சென்றனர். நேற்று முன்தினம் காலை வழிபாடு நடத்த பொதுமக்கள் வந்தபோது, தேவாலயத்தின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் தேவாலய நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிர்வாகிகள் வந்து பார்வையிட்டனர். அப்போது மர்மநபர்கள் தேவாலயத்தின் கதவை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தேவாலய நிர்வாகம் சார்பாக அடிமாலி போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீசார் தேவாலயத்துக்கு வந்து பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தேவாலயத்தில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவாலயத்தில் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பீர்மேடுவை அடுத்த பாம்பனார் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. சம்பவத்தன்று இந்த தேவாலயத்துக்குள் புகுந்த மர்மநபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர். இதேபோல் பட்டுமலை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் புகுந்த மர்மநபர்கள் உண்டியலை உடைத்துள்ளனர். ஆனால் உண்டியலில் பணம் இல்லாததால் அதனை அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து தேவாலயங்கள் நிர்வாகம் சார்பாக பீர்மேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story