தி.மு.க.பிரமுகர் கூரைவீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது - தேர்தல் முன்விரோதம் காரணமா? போலீசார் விசாரணை
விருத்தாசலம் அருகே தி.மு.க. பிரமுகரின் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா ? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே காணாதுகண்டான் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 55). இவர் தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். தற்போது நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் தீவிர பிரசாரம் செய்தார். இந்த நிலையில் குமார் தனது கூரை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார்.
இந்த நிலையில் இவரது கூரை வீடு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் முடியவில்லை. இதனிடையே இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் கூரை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது.
மேலும் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், துணிகள், முந்திரிகொட்டை மூட்டைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. சேதமதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து குமார் மங்கலம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேர்தல் முன்விரோதம் காரணமாக குமாரின் கூரைவீட்டுக்கு தீ வைக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story