மோடி, அமித்‌ஷா குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் வீட்டை பா.ஜனதாவினர் திடீர் முற்றுகை


மோடி, அமித்‌ஷா குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் வீட்டை பா.ஜனதாவினர் திடீர் முற்றுகை
x
தினத்தந்தி 31 Dec 2019 11:15 PM GMT (Updated: 31 Dec 2019 5:20 PM GMT)

பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்‌ஷா ஆகியோரை அவதூறாக பேசிய நெல்லை கண்ணன் வீட்டை பா.ஜனதாவினர் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவருக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

நெல்லை,

நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 29-ந் தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ் பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்‌ஷா, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பாரதீய ஜனதா மற்றும் அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக மேலப்பாளையம் போலீசார், நெல்லை கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

பா.ஜனதா போராட்டம்

இந்த நிலையில் நேற்று காலையில் பா.ஜனதா கட்சியினர் நெல்லை டவுனில் உள்ள நெல்லை கண்ணன் வீட்டை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பா.ஜனதா நிர்வாகிகள் வேல்ஆறுமுகம், முருகதாஸ், சுரே‌‌ஷ், பாலாஜி கிரு‌‌ஷ்ணசாமி, இந்து முன்னணி குற்றாலநாதன் உள்ளிட்டோர் இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் நெல்லை கண்ணனுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மதுரை சென்றார்

இதையடுத்து வீட்டை முற்றுகையிட்ட பா.ஜனதாவினர், நெல்லை கண்ணன் அனுமதிக்கப்பட்ட ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு தரையில் அமர்ந்து நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் விரைந்து வந்து பா.ஜனதாவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் வந்ததால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து நெல்லை கண்ணன் மதுரையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் ஆஸ்பத்திரி முன்பு திரண்ட பா.ஜனதாவினர் கலைந்து சென்றனர்.

Next Story