உத்தவ் தாக்கரே தலைமையிலான மந்திரி சபையில் 3 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு


உத்தவ் தாக்கரே தலைமையிலான மந்திரி சபையில் 3 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு
x
தினத்தந்தி 31 Dec 2019 11:15 PM GMT (Updated: 31 Dec 2019 7:46 PM GMT)

உத்தவ் தாக்கரே தலைமையிலான மந்திரி சபையில் 3 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை, 

மராட்டியத்தில் சிவசேனா அரசு பதவியேற்று ஒருமாதத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில், மந்திரி சபை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயையும் சேர்த்து மந்திரிகளின் எண்ணிக்கை 43 ஆக உள்ளது. ஆனால் இந்த மந்திரிசபையில் 3 பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

இதில் காங்கிரசை சேர்ந்த 2 பெண்களும், தேசியவாத காங்கிரசை சேர்ந்த ஒருவரும் அடங்குவர். காங்கிரஸ் கட்சி சார்பில் பதவியேற்று கொண்டவர்களில் விதர்பா மண்டலத்தை சேர்ந்த வக்கீலான யசோமதி தாக்குர் மற்றும் மும்பை தாராவியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வர்ஷா கெய்க்வாட் ஆகியோர் ஆவர்.

இதேபோல் தேசியவாத காங்கிரஸ் சார்பில் அதிதி தத்காரே மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார். இவர் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சுனில் தத்காரேயின் மகள் ஆவார். இவர் ஸ்ரீவர்தன் தொகுதியில் இருந்து முதல்முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கையோடு மந்திரி பதவியும் ஏற்று உள்ளார்.

அதேநேரம் சிவசேனா கட்சியில் 2 பெண் எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

சிவசேனா கட்சியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏ.வான அப்துல் சத்தாருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. காங்கிரசை சேர்ந்தவரான அப்துல் சத்தாருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் சிவசேனா கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story