மனைவியின் கள்ளத்தொடர்பை கண்டித்ததால் தொழிலாளி குத்திக்கொலை மந்திரவாதி வெறிச்செயல்


மனைவியின் கள்ளத்தொடர்பை கண்டித்ததால் தொழிலாளி குத்திக்கொலை மந்திரவாதி வெறிச்செயல்
x
தினத்தந்தி 1 Jan 2020 4:30 AM IST (Updated: 1 Jan 2020 1:34 AM IST)
t-max-icont-min-icon

மனைவியின் கள்ளத்தொடர்பை கண்டித்ததால் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மந்திரவாதியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வெண்ணந்தூர்,

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் தினசரி மார்க்கெட் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கிரு‌‌ஷ்ணன் (வயது 55). சென்ட்ரிங் தொழிலாளி. இவருடைய மனைவி வசந்தா (45). இவர் நாச்சிப்பட்டியில் பியூட்டி பார்லர் மற்றும் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு மனோஜ் (21) என்ற மகனும், உமா மகேஸ்வரி (20) என்ற மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிரு‌‌ஷ்ணன் குடும்பத்தினருக்கும், சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்கிற ராம்ஜெத்மலானி (30) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. ராமச்சந்திரன் மாந்திரீகம், ஜோதிடம் சொல்லியும் வந்துள்ளார். இவருக்கு திருமணமாகவில்லை.

கள்ளத்தொடர்பு

இதற்கிடையே வசந்தா குடும்பத்தினர் பொருளாதார ரீதியில் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மந்திரவாதி ராமச்சந்திரன், கிரு‌‌ஷ்ணன் குடும்பத்துக்கு உதவுவதாக கூறி மாந்திரீகம், பரிகார பூஜை செய்தால் பணம் செழிக்கும் என்று அவர்களிடம் ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய அவர்கள் ராமச்சந்திரனை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசினர்.

இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அவர் அடிக்கடி வசந்தா வீட்டிற்கு சென்று வந்தார். மேலும் போனிலும் ராமச்சந்திரன் அவ்வப்போது வசந்தாவிடம் பேசி வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இவர்களது கள்ளத்தொடர்பு கிரு‌‌ஷ்ணனுக்கு தெரியவரவே, அவர் மனைவியை கண்டித்தார்.

கத்திக்குத்து

இதுதொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிருஷ்ணன் வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் ராமச்சந்திரனை நேரில் அழைத்து கண்டித்து அனுப்பினர். இதனால் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் நேற்றுமுன்தினம் இரவு குடிபோதையில் கிரு‌‌ஷ்ணன் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது 2 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து, தப்பி ஓடிய ராமச்சந்திரன் அங்கிருந்து சென்றுவிட்டாரா? அல்லது அதே பகுதியிலேயே சுற்றித்திரிகிறாரா? என பார்க்க கிரு‌‌ஷ்ணனும், அவரது மகன் மனோஜூம் சென்றனர். ஆனால் அதேபகுதியில் பதுங்கி இருந்த ராமச்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கிரு‌‌ஷ்ணனின் வயிறு மற்றும் கை பகுதிகளில் சரமாரியாக குத்தினார். தனது கண் எதிரே தந்தை கத்தியால் குத்தப்பட்டதை பார்த்த மனோஜ் கதறினார்.

வலைவீச்சு

பலத்த காயம் அடைந்து கீழே விழுந்த கிருஷ்ணனை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு வெண்ணந்தூரில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே கிரு‌‌ஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மந்திரவாதி ராமச்சந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர். மகன் கண் எதிரே தந்தை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் வெண்ணந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story