2-ம் கட்ட தேர்தலில் 7 ஒன்றியங்களில் பதிவான, ஓட்டு பெட்டிகள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைத்து ‘சீல்’ வைப்பு


2-ம் கட்ட தேர்தலில் 7 ஒன்றியங்களில் பதிவான, ஓட்டு பெட்டிகள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைத்து ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 1 Jan 2020 4:00 AM IST (Updated: 1 Jan 2020 2:22 AM IST)
t-max-icont-min-icon

2-ம் கட்ட தேர்தலில் 7 ஒன்றியங்களில் பதிவான ஓட்டு பெட்டிகள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த மையங்களுக்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

விருத்தாசலம், 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் கடலூர், கம்மாபுரம், குறிஞ்சிப்பாடி, மங்களூர், மேல்புவனகிரி, பண்ருட்டி மற்றும் பரங்கிப்பேட்டை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து அண்ணாகிராமம், காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம், குமராட்சி, நல்லூர், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் விருத்தாசலம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று முன்தினம் 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அடங்கிய பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு வரப்பட்டது. அனைத்து ஓட்டு பெட்டிகளும் வைக்கப்பட்டதும், அந்த மைய கதவை பூட்டி தேர்தல் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

விருத்தாசலம் ஒன்றியத்தில் பதிவான ஓட்டுபெட்டிகள், கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. அதன் பிறகு மாவட்ட வருவாய் அலுவலர் பத்ரிநாத், தாசில்தார் கவியரசு, விருத்தாசலம் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயக்குமாரி, துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பொட்டா, குருசாமி, கணேசன், புஷ்பராஜ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி வாக்கு எண்ணிக்கை மையத்தின் நுழைவு வாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி நுழைவுவாயில் முன்பு மற்றும் கல்லூரியின் பின்புறம், ஓட்டுபெட்டிகள் வைக்கப்பட்டுள்ள 3-வது தளத்தின் மேல் தளத்தில் என மொத்தம் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அனைத்து மையங்களிலும் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த மையங்களில் நாளை(வியாழக்கிழமை) வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் ஓட்டுபெட்டிகள் திறந்து ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. 

Next Story