திருபுவனை அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது


திருபுவனை அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 31 Dec 2019 11:00 PM GMT (Updated: 31 Dec 2019 9:42 PM GMT)

திருபுவனை அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருபுவனை,

புதுச்சேரி மாநில எல்லைப்பகுதியான மதகடிப்பட்டு பகுதியில் தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் உள்ளன. இங்கு படித்து வரும் மாணவர்களை ஒரு கும்பல் கஞ்சா போதை பழக்கத்துக்கு அடிமையாக்கி அவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக திருபுவனை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் உத்தரவின்பேரில், திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று முன்தினம் மாலை குற்றப்பிரிவு போலீசார் நல்லூர்-மதகடிப்பட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஒரு கல்லூரி அருகே சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது அங்கு 2 பேர் நின்று கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதை கண்டு பிடித்தனர்.

கைது

அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்களில் ஒரு வாலிபர் தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் விலிங்காரெட்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சித்தா என்ற கார்த்திகேயன் (37) என்பதும், மற்றொருவர் கொத்தாம்பாக்கம் காலனியை சேர்ந்த வேலுச்சாமி (20) என்பதும் தெரிய வந்தது.

அவர்கள் 2 பேரும் கஞ்சாவை சிறு, சிறு பொட்டலங்களாக கட்டி, மாணவர்களுக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 110 கிராம் கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேல் விசாரணை நடந்து வருகிறது.

Next Story