கிரிக்கெட் விளையாடியபோது தகராறு: வாலிபர் கொலை வழக்கில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை
கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொலை செய்த வழக்கில், 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உப்பள்ளி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.
உப்பள்ளி,
உப்பள்ளி டவுன் எல்லாப்பூர் பகுதி மெகபூப் நகரில் வசித்து வந்தவர் நசீர் உசேன்சாப் முதகல்(வயது 23). இந்த நிலையில் சம்பவத்தன்று நசீர் தனது நண்பர்கள் சிலருடன், டவுனில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தார். அதே மைதானத்தில் பானிஒனி பகுதியை சேர்ந்த 12 பேர் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தார்கள்.
இந்த நிலையில் கிரிக்கெட் விளையாட்டின் போது நசீருக்கும், 12 பேருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அவர்கள் 12 பேரும் சேர்ந்து நசீரை தாக்கி உள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நசீரை மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அவர் சிட்டிகுப்பி மருத்துவமனை அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த 12 பேரும் சேர்ந்து நசீரை வழிமறித்து அவரிடம் மீண்டும் தகராறு செய்தனர். மேலும் கத்தியால் நசீரை, 12 பேரும் சேர்ந்து சரமாரியாக குத்தினார்கள். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நசீர் உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நசீர் பரிதாபமாக இறந்து விட்டார்.
இந்த கொலை சம்பவம் குறித்து உப்பள்ளி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பானிஒனி பகுதியை சேர்ந்த கல்லப்பா(வயது 26), அய்யப்பா சிரகோல்(25), அய்யப்பா லக்குந்தி(25), மஞ்சுநாத் உப்பார்(26), ஸ்ரீபாத பூஜார்(24), விஷால்(19), சந்தோஷ் சுனாய்(26), மஞ்சுநாத் கோகாக்(25), அனில்(28), நிங்கப்பா, அஜய், சித்தார்த்தா ஆகிய 12 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ந் தேதி நடந்தது.
கைதான 12 பேர் மீதும் உப்பள்ளி 5-வது சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். 12 பேர் மீது குற்றப்பத்திரிகையும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் 12 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த 4 நாட்களுக்கு முன்பு நீதிபதி கே.எஸ்.கங்காதர் கூறியிருந்தார்.
மேலும் இந்த வழக்கில் 30ந் தேதி(நேற்று முன்தினம்) தீர்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் மாலை நீதிபதி கே.எஸ்.கங்காதர் தீர்ப்பு கூறினார். அதில் நசீர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 ?பருக்கும் தொடர்பு இருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிருபணம் ஆகி உள்ளதால் 12 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.6 லட்சத்து 65 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து 12 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.
கொலை வழக்கில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதால் உப்பள்ளி கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story