துணை முதல்-மந்திரி பதவி ரத்து குறித்து ஆலோசனை நடக்கவில்லை - கோவிந்த் கார்ஜோள் பேட்டி


துணை முதல்-மந்திரி பதவி ரத்து குறித்து ஆலோசனை நடக்கவில்லை - கோவிந்த் கார்ஜோள் பேட்டி
x
தினத்தந்தி 31 Dec 2019 11:30 PM GMT (Updated: 31 Dec 2019 11:36 PM GMT)

துணை முதல்-மந்திரி பதவியை ரத்து செய்வது குறித்து ஆலோசனை நடக்கவில்லை என்று கோவிந்த் கார்ஜோள் கூறினார். துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு, 

துணை முதல்-மந்திரி பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் எங்கள் கட்சியில் இதுபற்றி எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. எங்கள் கட்சியின் மேலிட தலைவர்கள் எடியூரப்பாவுடன் இதுபற்றி ஆலோசித்தால் மட்டுமே அதற்கு மதிப்பு உண்டு. அதைவிடுத்து மற்றவர்கள் இதுபற்றி பேசினால் அதற்கு மதிப்பு இல்லை.

யாருடைய கருத்தை மதிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். எல்லாவற்றையும் கட்சி மேலிடம் முடிவு செய்யும். கட்சி எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். யாராக இருந்தாலும், கட்டுப்பாட்டுடன் பேச வேண்டும். பெங்களூரு குதிரை பந்தய மைதான நிர்வாகத்தில் மாநில அரசுக்கு ரூ.37 கோடி வாடகையை செலுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக இது நிலுவையில் உள்ளது.

அந்த வாடகை பாக்கியை வசூலிக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த குதிரை பந்தய மைதான நிர்வாகத்தினர் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றுள்ளனர். இந்த வழக்கு வருகிற 29-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு குதிரை பந்தய மைதானத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலம் வாபஸ் பெறப்படும்.

நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடங்களை கருப்பு பகுதிகள் என்று அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பெயர் பலகை அந்த இடங்களில் வைக்கப்படும். விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் சேதம் அடைந்த சாலைகள், பாலங்களை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வெள்ளத்தால் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு சாலைகள் சேதம் அடைந்துள்ளன. சுங்க சாவடிகளில் ‘பாஸ்டேக்‘ பாதைகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. வாகன ஓட்டிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. இதுகுறித்து மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரியிடம் பேசியுள்ளேன். இந்த குழப்பத்திற்கு தீர்வு காணுமாறு கூறியுள்ளேன். குழப்பத்தை தீர்ப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.

இவ்வாறு கோவிந்த் கார்ஜோள் கூறினார்.

Next Story