ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்கள்- தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு


ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்கள்- தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 1 Jan 2020 10:45 PM GMT (Updated: 1 Jan 2020 2:38 PM GMT)

ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளானவர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் ஆங்கில புத்தாண்டு-2020 பிறப்பை முன்னிட்டு மரகதவள்ளித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் மற்றும் பிரம்மபுரீஸ்வரர் உடனுறை ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோவிலில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல் மரகதவள்ளித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் மூலவர் பெருமாளுக்கு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மூலவர் மற்றும் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவபெருமாளை தரிசனம் செய்தனர்.

எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள பாலமுருகன் கோவில், வடக்கு மாதவி சாலையில் உள்ள சவுபாக்கிய விநாயகர் கோவில், தெப்பக்குளம் அருகே உள்ள அய்யப்பசாமி கோவில்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு நடை திறக்கப்பட்டது. இதில் அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடுகள்

பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தனி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில், வெங்கனூர் விருத்தாசல ஈஸ்வரர் கோவில், வாலிகண்டபுரத்தில் உள்ள வாலீஸ்வரர் கோவில், எஸ்.ஆடுதுறையில் உள்ள குற்றம்பொறுத்தவர் கோவில், பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற மதுரகாளியம்மன் கோவில், செட்டிகுளத்தில் மலைக்குன்றின் மீதுள்ள தண்டாயுதபாணி கோவில், செட்டிகுளத்தில் உள்ள குபேர ஸ்தலமான ஏகாம்பரேசுவரர் கோவில், பாடாலூர் அருகே பெருமாள் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வழித்துணை ஆஞ்சநேயர் கோவில், பெரம்பலூர் தீரன்நகர் எதிரில் உள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் நேற்று புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

கிறிஸ்தவ தேவாலயங்களில்...

பெரம்பலூரில் உள்ள தூய பனிமயமாதா தேவாலயத்தில் பெரம்பலூர் மறைவட்ட முதன்மை குருவும், பங்குதந்தையுமான ராஜமாணிக்கம் தலைமையில் நள்ளிரவு நற்கருணை ஆராதனையும், சிறப்பு திருப்பலியும் நடந்தன. இதில் பனிமாதா தேவாலய பங்கு உறுப்பினர்கள், கிறிஸ்தவ கன்னிகையர், கத்தோலிக்க சங்க நிர்வாகிகள், கிறிஸ்தவமக்கள் மற்றும் திரளான பெண்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. திருத்தலம், பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள டி.இ.எல்.சி. தூய யோவான் திருத்தலம் ஆகிய கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவு சிறப்பு திருப்பலிகள் நடந்தது. பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் பாளையத்தில் உள்ள பழமையான புனித சூசையப்பர் தேவாலயத்தில் புத்தாண்டையொட்டி நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Next Story