கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் உலா வந்த காட்டுயானைகள் - போக்குவரத்து பாதிப்பு
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் உலா வந்த காட்டுயானைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு குன்னூர் வழியாக சாலை செல்கிறது. இதேபோன்று கோத்தகிரி வழியாக மற்றொரு சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் அரசு பஸ்கள், சரக்கு லாரிகள் உள்பட ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த சாலையானது நேர்த்தியாகவும், அதிக வளைவுகள் இல்லாமலும் இருப்பதால் சமவெளி பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு கோத்தகிரி வழியாகவே செல்ல வாகன ஓட்டிகள் விரும்புகின்றனர்.
இதற்கிடையில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலா மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளன. இங்கு கோடை காலத்தில் பலாப்பழ சீசன் நிலவும். அப்போது சமவெளி பகுதிகளில் இருந்து அதிகளவில் காட்டுயானைகள் படையெடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் மற்ற நேரங்களிலும் எப்போதாவது காட்டுயானைகள் சாலையில் உலா வருவது நீடித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் 2-வது குண்டூசி வளைவில் குஞ்சப்பனை அருகே 2 காட்டுயானைகள் உலா வந்தன. உடனே அந்த வழியாக வந்த டிரைவர்கள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தினர். இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் சாலையிலேயே உலா வந்த காட்டுயானைகள், அதன்பிறகு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றன. அதன் பின்னரே அந்த வழியே மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
வழக்கமாக பலாப்பழ சீசன் காலங்களில் மட்டுமே கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். தற்போது மற்ற நேரங்களிலும் காட்டுயானைகள் உலா வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பீதியுடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தொடர்ந்து சாலையில் உலா வரும் காட்டுயானைகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story