கோவை அருகே, ஆற்றில் குளித்த மாணவர் சேற்றில் சிக்கி பலி
கோவை அருகே ஆற்றில் குளித்த மாணவர் சேற்றில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
போத்தனூர்,
கோவை எட்டிமடை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். கூலிதொழிலாளி. இவருடைய மகன் அரவிந்தசாமி(வயது 16). இவர் மதுக்கரையில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அரவிந்தசாமி தனது நண்பர்களுடன் காளியாபுரம் பகுதியில் உள்ள ஆற்றுக்கு குளிக்கச்சென்றார். நண்பர்களுடன் அரவிந்தசாமி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அரவிந்தசாமி ஆற்றில் சேறு நிறைந்த பகுதியில் சிக்கி தவித்தார். இதனை பார்த்த அவருடைய நண்பர்கள் சத்தம் போட்டனர். இவர்களது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் சேற்றில் சிக்கி அரவிந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கே.ஜி.சாவடி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சேற்றில் சிக்கி உயிரிழந்த அரவிந்தசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான மாணவரின் உடலை பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர். கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story