ஈரோட்டில் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஈரோட்டில் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 1 Jan 2020 10:00 PM GMT (Updated: 1 Jan 2020 4:54 PM GMT)

ஈரோட்டில், புத்தாண்டையொட்டி கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஈரோடு,

ஆங்கில புத்தாண்டு 2020 நேற்று பிறந்தது. இதையொட்டி ஈரோட்டில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஈரோடு மாநகர் பகுதியில் பிரசித்தி பெற்ற பெரியமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் நடை நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. 5 மணிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், அரிசி மாவு உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் சில பெண்கள் விளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர்.

இதேபோல் ஈரோடு மோளக்கவுண்டன்பாளையம் காந்திபுரம் பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விநாயகருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் விநாயகருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.

ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் உள்ள ராம பக்த ஆஞ்சநேயர் ஏழுமலையான் அலங்காரத்திலும், கொண்டத்து பத்ரகாளியம்மன் ரேணுகா தேவி அலங்காரத்திலும், திண்டல் முருகன் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் உள்ள வலம்புரி செல்வ விநாயகருக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ராஜ அலங்காரமும், முனிசிபல் காலனியில் உள்ள சக்தி விநாயகருக்கு வெள்ளி கவச அலங்காரமும், கோட்டை பகுதியில் உள்ள பெருமாள் மற்றும் ஈஸ்வரனுக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது. இதேபோல் ஈரோட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story