ராணிப்பேட்டையில், கிணற்றில் வீசி குழந்தை கொலை


ராணிப்பேட்டையில், கிணற்றில் வீசி குழந்தை கொலை
x
தினத்தந்தி 2 Jan 2020 4:00 AM IST (Updated: 1 Jan 2020 10:44 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை காரை பகுதியில் கிணற்றில் வீசப்பட்ட குழந்தை பிணமாக கண்டெடுக்கப்பட்டது.

சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டையில் உள்ள காரை பகுதியின் நுழைவில் போலீசுக்கு சொந்தமான காலி மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் செக்கிலி கிணறு என்றழைக்கப்படும் பாழடைந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து நேற்று காலை துர்நாற்றம் வீசியது.

இதனால் அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது கிணற்றில் உள்ள தண்ணீரில் குழந்தை பிணம் மிதப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கிணற்றில் இருந்த குழந்தை பிணத்தை மீட்டனர். பிறந்து சுமார் 4 நாட்களே ஆன நிலையில் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட குழந்தை ஆணா?, பெண்ணா? என்று தெரியாதபடி அழுகிய நிலையில் இருந்தது.

இதையடுத்து போலீசார் பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து ஈவு இரக்கமின்றி கிணற்றில் குழந்தையை வீசிய நபர் யார்? எதனால் குழந்தையை தூக்கி வீசினார்கள். என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் ராணிப்பேட்டை காரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story