அரக்கோணம் அருகே, கூலிப்படையை அனுப்பி கணவனை கொல்ல முயன்ற பெண் - 4 பேர் கைது


அரக்கோணம் அருகே, கூலிப்படையை அனுப்பி கணவனை கொல்ல முயன்ற பெண் - 4 பேர் கைது
x
தினத்தந்தி 2 Jan 2020 5:30 AM IST (Updated: 1 Jan 2020 11:23 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே கணவனை கொல்ல மனைவியே கூலிப்படையை அனுப்பி வைத்து உள்ளார். இதையடுத்து மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரக்கோணம்,

சென்னை ஆவடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 30). அதே பகுதியில் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த மாதம் 29-ந் தேதி ஆவடியில் இருந்து திருத்தணிக்கு சாமி கும்பிட மின்சார ரெயிலில் சென்று கொண்டிருந்தார்.

அரக்கோணத்திற்கும்- திருத்தணிக்கும் இடையே பிற்பகல் 2 மணியளவில் ரெயில் சென்று கொண்டிருந்த போது ராஜேந்திரன் பயணம் செய்த பெட்டியில் இருந்த 3 பேர் திடீரென அவரை தாக்கி ரெயிலில் இருந்து வெளியே தள்ளி விட்டனர். இதில் ராஜேந்திரன் தண்டவாளம் ஓரமாக விழுந்து படுகாயமடைந்து மயங்கினார். மாலையில் மயக்கம் தெளிந்தவுடன் அவர் எழுந்து அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிரி, ராமகிரு‌‌ஷ்ணன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

எனக்கும் எனது மனைவி அஸ்வினிக்கும் (24) இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. என் மேல் உள்ள கோபத்தில் எனது மனைவிதான் கூலிப்படையை வைத்து என்னை கொல்ல முயற்சி செய்து உள்ளார் என்றார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், ராஜேந்திரனை அவரது மனைவி அஸ்வினி கூலிப்படையை வைத்து கொல்ல முயற்சி செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து அஸ்வினி மற்றும் அவரது தம்பி சென்னை, செம்பியம் பகுதியை சேர்ந்த காமேஸ்வரன் (22), ஆவடியை சேர்ந்த அனுரகு (22), தினே‌‌ஷ் (26) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story