புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேர் கொலை - வடலூர், நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு


புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேர் கொலை - வடலூர், நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Jan 2020 5:00 AM IST (Updated: 2 Jan 2020 1:19 AM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேர் கொலை செய்யப்பட்டனர். வடலூர், நெல்லிக்குப்பத்தில் நடைபெற்ற இந்த பரபரப்பு சம்பவங்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

வடலூர், 

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள நெத்தனாங்குப்பம் தங்கராசு நகரை சேர்ந்தவர் காந்தாராவ் (வயது 55). நெய்வேலி என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்துவந்த இவர், அ.தி.மு.க. கிளை நிர்வாகியாகவும் இருந்து வந்தார். இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு செல்வமணி(24), செல்வகுமார் (21) என்ற 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

காந்தாராவ் குடும்பத்துக்கும், அதே பகுதியை சேர்ந்த அருள் என்பவரது குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் அருள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சதீ‌‌ஷ், ரஞ்சித்குமார் ஆகியோர் ஆங்கில புத்தாண்டை கொண்டாட காந்தாராவின் வீட்டில் இருந்த மேஜையை எடுத்துப்போட்டு, கேக் வெட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். மேலும் அவர்கள் ஒலி பெருக்கியில் பாட்டு போட்டு நடனமும் ஆடிக்கொண்டிருந்தனர்.

இதைபார்த்த காந்தாராவ், ஏன் அதிக சத்தத்துடன் பாட்டு போட்டு தொந்தரவு செய்கிறீர்கள் என்று கூறி அருள் உள்ளிட்டவர்களை கண்டித்துள்ளார். மேலும் அவர் மேஜையை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றார். இதனால் காந்தாராவுக்கும், அருள் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அருள், சதீ‌‌ஷ், ரஞ்சித்குமார் ஆகியோர் கற்கள் மற்றும் கட்டையால் காந்தாராவை சரமாரியாக தாக்கினர். இதையடுத்து அவர் வீட்டுக்கு சென்று விட்டார். இருப்பினும் அருள் உள்ளிட்டவர்கள் காந்தா ராவின் வீட்டுக்குள் சென்று அவரை மீண்டும் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில் வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீண்டும் சிகிச்சைக்காக வடலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காந்தாராவ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த தகவலின் பேரில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், வடலூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் காந்தாராவ் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அருள், சதீ‌‌ஷ், ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லிக்குப்பம் மேல்பாதி அம்பேத்கர் நகர் மற்றும் மேல்பாதி காலனி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆங்கிலப்புத்தாண்டை வரவேற்று அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தனித்தனியாக ஆட்டம், பாட்டம் என கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த கொண்டாட்டத்தில் அம்பேத்கர் நகரை சேர்ந்த வேல்முருகன் (வயது 28) என்பவரும் கலந்து கொண்டார்.

இந்த கொண்டாட்டத்தின் போது அம்பேத்கர் நகரை சேர்ந்தவர்களுக்கும், மேல்பாதி காலனி பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் அவர்கள் ஒருவரையொருவர் திட்டி தாக்கிக் கொண்டனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதை அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து விரட்டியடித்து கூட்டத்தை கலைத்தனர். பின்னர் சிறிது நேரம் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கிருந்து சென்றவுடன், தகராறு நடந்த இடத்திற்கு வேல்முருகன் வந்தார்.

இதை பார்த்த ஒரு கும்பல் அங்கு வந்து வேல்முருகனை சரமாரியாக தாக்கி, அரிவாளால் வெட்டியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வேல்முருகன் அங்குள்ள முட்புதரில் சரிந்து விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறந்தததை உறுதி செய்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இது பற்றி அறிந்த அப்பகுதி மக்கள் நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமே‌‌ஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். இதற்கிடையே வேல்முருகனின் மனைவி சவுமியா மற்றும் உறவினர்கள் கொலை செய்யப்பட்ட வேல்முருகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

பின்னர் போலீசார் வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலைக்கு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வடலூர், நெல்லிக்குப்பத்தில் அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story