தனித்தனி விபத்தில், மாணவன் உள்பட 2 பேர் சாவு


தனித்தனி விபத்தில், மாணவன் உள்பட 2 பேர் சாவு
x
தினத்தந்தி 1 Jan 2020 10:30 PM GMT (Updated: 1 Jan 2020 7:50 PM GMT)

தனித்தனி விபத்தில் மாணவன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை அவுரிதோட்டத்தெரு பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மனைவி வசந்தா (வயது 38). இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இருவரும் வேலைக்கு சென்று விட்டு சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

மணலூர்பேட்டை பாரத ஸ்டேட் வங்கி அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த மினிபஸ் ஒன்று நடராஜன் ஓட்டிவந்த சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வசந்தாவை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வசந்தா பரிதாபமாக உயிரிழந்தார். நடராஜன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் அருகே உள்ள சிறுவானல் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி மகன் பாரதி(வயது 14). இவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ரவீந்திரன்(22) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்தில் இருந்து சிறுவாலைக்கு சென்று கொண்டிருந்தான். நேமூர் அண்ணாநகர் அருகே வந்தபோது, பின்னால் வந்த லாரி ஒன்று ரவீந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி பாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதற்கிடையே அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரவீந்திரன், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அன்னியூரை சேர்ந்த ஹேமனன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story