மாவட்ட தலைநகரமான திருப்பத்தூரில், அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை


மாவட்ட தலைநகரமான திருப்பத்தூரில், அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 1 Jan 2020 9:30 PM GMT (Updated: 1 Jan 2020 7:50 PM GMT)

மாவட்ட தலைநகரமான திருப்பத்தூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டு திருப்பத்தூர் மாவட்ட தலைநகராக மாற்றப்பட்டு உள்ளது. இங்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இங்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகாரிகள் உள்பட பலர் பணியாற்றி வருகிறார்கள்.

மேலும் சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் பொதுமக்கள், வியாபாரிகள் பெங்களூரு, சேலம், தூத்துக்குடி போன்ற ஊர்களுக்கு தினமும் சென்று வருகின்றனர். அதிகப்படியான கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணிக்கு செல்கின்றனர். விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் விளைந்த பொருட்களை ரெயில் மூலம் சேலம், பெங்களூரு, கேரளா போன்ற பகுதிகளுக்கும் எடுத்து சென்று விற்பனை செய்கிறார்கள். இங்கு சில ரெயில்கள் நிற்காமல் செல்வதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே திருப்பத்தூரில் நிற்காமல் செல்லும் ரெயில்கள் அனைத்தும் நின்று செல்ல வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திருப்பத்தூர் ரெயில்வே ஜங்‌‌ஷன் வழியாக இயங்கும் தென் தமிழ்நாட்டிற்கும், கேரளத்திற்கும், வட இந்திய பகுதிகளுக்கும், பெங்களூருவில் இருந்து இயங்கும் ஜோலார்பேட்டை வழியாக செல்லாத ரெயில்களான வாஸ்கோ - வேளாங்கண்ணி, தூத்துக்குடி - வோகா, கோச்சுவேலி -உப்பிலி, மங்களூர் - ய‌‌ஷ்வந்த்பூர், திருச்சி - கங்கா நகர், கொச்சி - பானஸ்வாடி பெங்களூரு ஆகிய வாராந்திர ரெயில்கள் நின்று செல்ல ஆவன செய்ய வேண்டும்.

இந்த ரெயில்கள் திருப்பத்தூரில் நின்று சென்றால் வட இந்திய மக்களையும், தென்தமிழ்நாட்டுப் மக்களும் பெரிதும் பயன்பெறுவார்கள். மேலும் தினமும் இயக்கப்படும் கோவை - பெங்களூரு 2 அடுக்கு ரெயில் உதய் எக்ஸ்பிரஸ் சேலம் ஜங்‌‌ஷனில் நிறுத்தப்பட்ட பின்னர் குப்பம் ரெயில் நிலையத்தில் தான் நிற்கிறது.

இதற்கு இடைப்பட்ட தூரம் 150 கிலோமீட்டர். ஆகையால் திருப்பத்தூரில் இந்த ரெயிலை நிறுத்தி செல்ல வேண்டும். மேலும் கோவை - சென்னை இடையே இயங்கும் கோவை எக்ஸ்பிரஸ், கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்.

இதேபோல பொதுமக்கள் கோவை - கேரளா மற்றும் திருப்பதி, ஐதராபாத் செல்ல வசதியான ஐதராபாத் கொச்சுவேலி சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் திருப்பத்தூரில் நின்று செல்ல வேண்டும் என திருப்பத்தூர் பொதுமக்களின் நீண்ட வருடங்களாக கோரிக்கையாக உள்ளது.

தற்போது மாவட்ட தலைநகராக மாற்றப்பட்டதால் கேரளா மாநிலத்தில் நின்று செல்வதை போல அனைத்து ரெயில்களையும் திருப்பத்தூரில் நின்று செல்ல வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story