தாணிக்கோட்டகம் ஊராட்சியில் 2-வது வார்டுக்கு மறு வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது


தாணிக்கோட்டகம் ஊராட்சியில் 2-வது வார்டுக்கு மறு வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது
x
தினத்தந்தி 1 Jan 2020 11:00 PM GMT (Updated: 1 Jan 2020 7:51 PM GMT)

தாணிக்கோட்டகம் ஊராட்சியில் 2-வது வார்டுக்கு நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாய்மேடு,

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் ஊராட்சியில் கடந்த 30-ந்தேதி 2-ம் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது தாணிக்கோட்டகம் தெற்குகாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த ஊராட்சியில் 2-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் மணிவண்ணன், முருகையன், குணசீலன், உத்திராபதி ஆகிய 4 பேரும் போட்டியிட்டனர். இந்தநிலையில் வாக்குச்சீட்டில் 4 சின்னங்களுக்கு பதில் 5 சின்னங்கள் இருந்தன. 4 சின்னங்களுக்கு பதிலாக கூடுதலாக ஒரு சின்னம் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

இதுகுறித்து வேட்பாளர்கள் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் செல்லத்துரையிடம் முறையிட்டனர். உடனடியாக அவர் தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வராசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் தாணிக்கோட்டகம் ஊராட்சியில் உள்ள 2-வது வார்டு உறுப்பினருக்கான வாக்குப்பதிவை நிறுத்த உத்தரவிட்டார்.

மறுவாக்குப்பதிவு

அப்போது 2-வது வார்டில் மொத்தம் உள்ள 420 வாக்குகளில் 172 வாக்குகள் பதிவாகி இருந்தன.

இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வராசு நேற்று தாணிக்கோட்டகம் ஊராட்சியில் 2-வது வார்டுக்கு மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்தார்.

அதன்படி நேற்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மதியரசு முன்னிலையில் மறுவாக்குப்பதிவு தாணிக்கோட்டகம் ஊராட்சியில் அமைதியான முறையில் நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

Next Story