உள்ளாட்சி தேர்தலில், 4 பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு தடை - கலெக்டர் உத்தரவு


உள்ளாட்சி தேர்தலில், 4 பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு தடை - கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 1 Jan 2020 9:45 PM GMT (Updated: 1 Jan 2020 7:58 PM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 4 பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதித்து கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

கலசபாக்கம் ஒன்றியம் எர்ணாமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர், பெரணமல்லூரை அடுத்த ஆணைபோகி ஊராட்சி மன்ற தலைவர், செங்கம் ஒன்றியம் 19-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர், செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 26-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் ஆகியோரின் பெயர்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது. முன்னதாக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் 4 வேட்பாளர்களின் பெயர்களும் இருந்தன. அதன் அடிப்படையில் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு தேர்தலும் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் சட்டமன்ற தொகுதி வாரியாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதால் உள்ளாட்சி பதவிகளுக்கான வாக்குகள் எண்ணுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையத்துடன் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கந்தசாமி ஆலோசனை நடத்தி, சம்பந்தப்பட்ட 4 உள்ளாட்சி பதவிகளுக்காக வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

எர்ணாமங்கலம் மற்றும் ஆணைபோகி ஊராட்சி மன்ற தலைவர் பதவி, செங்கம் ஒன்றியம் 19-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர், செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 26-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் ஆகியோரின் பெயர்கள் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் வரை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆனால் சட்டமன்ற தொகுதி வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, மாநில தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி சம்பந்தப்பட்ட 4 பதவிகளுக்கான வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் வாக்கு எண்ணிக்கையின் போது இவற்றுக்கான வாக்குகள் எண்ணிக்கை நடைபெறாது.

மேலும் 4 பதவிகளுக்கு பதிவான வாக்குகளை நிறம் வாரியாக பிரித்து, 50 தாள்களாக கட்டி வைக்கப்படும். வேட்பாளர், முகவர் ஆகியோரின் முன்னிலையில் சம்பந்தப்பட்ட வாக்குச்சீட்டுகளை பாதுகாப்பாக பெட்டியில் வைத்து முத்திரையிட்டு கருவூலத்தில் வைக்கப்படும். வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திடம் அறிவுரை பெறப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story