பேரணாம்பட்டு அருகே, அரவட்லா மலை கிராமத்தில் 16 யானைகள் அட்டகாசம்
பேரணாம்பட்டு அருகே அரவட்லா மலை கிராமத்தில் 16 யானைகள் நிலத்தில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன.
பேரணாம்பட்டு,
பேரணாம்பட்டு அருகே உள்ள மசிகம், மதினாப்பல்லி, சேராங்கல், பாலூர், ஓணாங்குட்டை, பத்தலப்பல்லி, எருக்கம்பட்டு, கோட்டையூரி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக குட்டியானைகளுடன் மொத்தம் 8 காட்டுயானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து நெல், கரும்பு, வாழை, மா, தென்னை, துவரை, அவரை ஆகியனவற்றை மிதித்து சேதப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் இந்த 8 யானைகள் அல்லாமல் புதிதாக மேலும் 8 யானைகள் என மொத்தம் 16 காட்டுயானைகள் கொண்ட கூட்டமானது எருக்கம்பட்டு, கோட்டையூர் அருகிலுள்ள அரவட்லாமலை வனப்பகுதிக்குள் புகுந்தது.
அரவட்லா மலைபகுதியில் பாஸ்மார்பெண்டா, அரவட்லா ஆகிய 2 மலை கிராமங்களில் ஊருக்கு அருகிலுள்ள ஆனந்தன் என்பவருடைய வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து 50 வாழை மரங்கள், உமாபதி என்பவருடைய வாழைத்தோட்டத்தில் புகுந்து 25 வாழைமரங்கள், பாபு என்பவருடைய வாழைத்தோட்டத்தில் 10 வாழை மரங்கள் பிடுங்கி சேதப்படுத்தின. மேலும் மோகன் என்பவருடைய நிலத்தில் நடவு செய்யப்பட்டிருந்த 1 ஏக்கர் கரும்பு தோட்டம், மணி என்பவருடைய நிலத்தில் ½ ஏக்கர் கரும்பு தோட்டத்தை துவசம் செய்தும், முனிராஜ் என்பவருடைய நிலத்தில் ½ ஏக்கர் நெல் பயிர், மற்றும் கால் ஏக்கர் மிளகாய் செடி ஆகியவற்றை மிதித்து நாசம் செய்து அட்டகாசத்தில் ஈடுப்பட்டன.
இதனை பார்த்த மலை கிராம விவசாயிகள், கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து நள்ளிரவில் நாலாபுறமும் திரண்டு சென்று தீப்பந்தங்கள் கொளுத்தி விரட்ட முயன்றனர். தகவலறிந்த பேரணாம்பட்டு வனத்துறையினர் விரைந்துசென்று கிராம மக்களுடன் இணைந்து பட்டாசு, பாணம், வெடி, வெடித்தும், தாரை, தப்பட்டை அடித்தும் அருகிலுள்ள வனப்பகுதிக்குள் நேற்று காலை சுமார் 6 மணியளவில் விரட்டியடித்தனர்.
ஆனால் யானைகள் கூட்டத்தில் மேலும் புதிதாக யானை கூட்டம் இணைந்துள்ளதால் அவை நகராமல் தங்களுக்கு பிடித்த பயிரான கரும்பு, வாழை, நெல் ஆகியனவற்றை சாப்பிட்டு சேதப்படுத்தி அப்பகுதியிலேயே சுற்றி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலைக்குள்ளாகி வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலை கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story