தொடர் விடுமுறை சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்


தொடர் விடுமுறை சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 1 Jan 2020 10:45 PM GMT (Updated: 1 Jan 2020 8:13 PM GMT)

சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் செல்லும் சாலையில் சித்தன்னவாசல் சுற்றுலா தலம் உள்ளது. இது தென்னிந்தியாவின் அஜந்தா குகை என்று அழைக்கப்படுகிறது. தற்போது புதுக்கோட்டை மாவட்டம், மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திரளான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் சுற்றுலா தலத்தில் முக்கியமான நாட்கள் மட்டும் அல்லாமல் தினமும் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருப்பர். தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடர் விடு முறையையொட்டி சுற்றுலா பயணிகள் அதிகமாக குவிந்தனர். மேலும் குடும்பத்துடன் சுற்றி பார்த்து படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறையையொட்டி குடும்ப சகிதங்களும், நண்பர்கள், சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவிகள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என அதிக அளவு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்களும் பெண்களும் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். சில சுற்றுலா பயணிகள் காலை முதல் மாலை வரை சுற்றுலா தலத்திலே மதிய உணவுடன் வந்து பொழுதை கழித்தனர். வெளியூர்களில் இருந்து கார், வேன், பஸ் போன்றவற்றில் பொதுமக்கள் அதிக அளவு வந்திருந்தனர்.

படகு குழாம்

சுற்றுலா தலத்தை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் இங்குள்ள சிறுவர் பூங்கா, தமிழன்னை சிலை, மகாவீரர் சிலை, அதிநவீன முறையில் இசை நீரூற்று குகை ஓவியம், மலை மீது அமர்ந்த சமணர் படுக்கையான ஏழடி பட்டம், போன்றவற்றை கண்டு கழித்தனர். மேலும் சிறுவர் பூங்கா, விளையாட்டு சறுக்கல், மண் யானைகள் போன்றவற்றில் விளையாடியும் செல்போன், கேமராக்களில் புகைப்படங்கள் எடுத்து குழந்தைகளுடன் மகிழ்ச்சி பொங்க விளையாடி மகிழ்ந்தனர். சிலர் புத்தாண்டையொட்டி நண்பர்கள், தோழிகளுடன் வந்து கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.

சித்தன்னவாசல் வரும் சுற்றுலா பயணிகள் மலையின் அழகை ரசித்தவாறு படகு குழாமில் குடும்ப சகிதங்களுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் புதுக்கோட்டை, விராலிமலை, மணப்பாறை, திருச்சியிலிருந்து வந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சுற்றுலா பயணிகள் கோரிக்கை

சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இசை நீரூற்று பழுதாகி இருக்கின்றது. இதனை உடனடியாக சரி செய்து சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு விட வேண்டும். மேலும் படகு குழாமில் சில படகுகள் உடைந்து ஓரங்கட்டப்பட்டிருக்கின்றது. இதனால் ஓரிரு படகுகள் மட்டுமே இயக்கப்படுகின்றது. படகுசவாரி செய்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது உள்ளது. எனவே கூடுதல் படகுகளை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உணவு உண்பதற்கு தனிஅறை அமைக்க வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரமாண்ட சிவன் சிலை பூங்காவில்

கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் குழந்தைகளின் பொழுதுபோக்கு இடங்கள் எதுவும் இல்லை. இதனால் தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கீரமங்கலத்தில் மெய்நின்றநாதர் சுவாமி ஆலயத்தின் முன்பு உள்ள தடாகத்தில் 84 அடி உயரத்தில் பிரமாண்ட சிவன் சிலை அமைக்கப்பட்ட போது தடாகத்தின் கரைகளில் குழந்தைகளுக்கான சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோவிலுக்கு வரும் போது குழந்தைகளை சிறுவர் பூங்காவில் விளையாட விட்டு அழைத்துச் செல்கின்றனர். அதேபோல நேற்று ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு வழக்கம் போல சிவன் சிலை தடாகத்தில் உள்ள பூங்காவில் குழந்தைகள் விளையாட குவிந்தனர்.


Next Story