ஆங்கில புத்தாண்டு திருவள்ளூர் மாவட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆங்கில புத்தாண்டு திருவள்ளூர் மாவட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 2 Jan 2020 3:45 AM IST (Updated: 2 Jan 2020 1:45 AM IST)
t-max-icont-min-icon

ஆங்கில புத்தாண்டையொட்டி திருவள்ளூர் மாவட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருவள்ளூர், 

ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்றுமுன்தினம் இரவு 12 மணி அளவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக திகழும் திருவள்ளூரில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல திருவள்ளூரில் உள்ள தீர்த்தீஸ்வரர் கோவில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், மணவாளநகரில் உள்ள சாய்பாபா கோவில், காக்களூரில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில், திருப்பந்தியூர் கிராமத்திலுள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அபிஷேகமும் என கடம்பத்தூர், பேரம்பாக்கம், திருப்பாச்சூர், மணவாளநகர், திருமழிசை, வெள்ளவேடு, வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு மப்பேடு, கீழச்சேரி, கூவம், குமாரச்சேரி, நரசிங்கபுரம் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பெரியபாளையம்- ஆரணி செல்லும் சாலை ராள்ளபாடி கிராமத்தில் சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இங்கு ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்றுமுன்தினம் இரவு முதல் சிறப்பு பூஜைகள், சிறப்பு யாகம் உள்ளிட்டவை நடைபெற்றது. நேற்று அதிகாலை சாய்பாபாவுக்கு பக்தர்கள் தங்கள் கைகளால் பாலாபிஷேகம் செய்தனர். அதன் பின்னர் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆரத்தி பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றது. அதன்பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகள், சிறப்பு ஹோமம், சிறப்பு அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றது. அதன் பின்னர் உற்சவர் பிரகார புறப்பாடு நடைபெற்றது. சென்னை, காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

பெரியபாளையம் அருகே உள்ள சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றது. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

அதேபோல திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாக இளைஞர்கள் நள்ளிரவு 12 மணி அளவில் கேக் வெட்டி கொண்டாடினர்.

Next Story