ஆங்கில புத்தாண்டு காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆங்கில புத்தாண்டு காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 2 Jan 2020 3:45 AM IST (Updated: 2 Jan 2020 1:45 AM IST)
t-max-icont-min-icon

ஆங்கில புத்தாண்டையொட்டி காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

பூந்தமல்லி, 

ஆங்கில புத்தாண்டையொட்டி காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் முருகன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நள்ளிரவு முதல் விட்டு, விட்டு கனமழை பெய்தது. அதையும் பொருட்படுத்தாமல் குன்றத்தூர், பூந்தமல்லி, மாங்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மழையில் நனைந்தபடி சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஆகம விதிகளின்படி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டது. மட்டுமல்லாமல் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க மாங்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காஞ்சீபுரத்தில் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் கோவில், காமாட்சியம்மன் கோவில், வரதராஜபெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில், கச்சபேஸ்வரர் கோவில், குமரகோட்டம் முருகன் கோவில், தும்பவனத்தம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் நேற்று அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அச்சரப்பாக்கம் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர், உமையாட்சீஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Next Story