ஆங்கில புத்தாண்டையொட்டி, பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ஆங்கில புத்தாண்டையொட்டி, பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 1 Jan 2020 10:15 PM GMT (Updated: 1 Jan 2020 8:20 PM GMT)

ஆங்கில புத்தாண்டை யொட்டி பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தளி,

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஓரே குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கோவில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கன்னிமார் மற்றும் நவக்கிரக சன்னதிகளும் உள்ளன.

அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி, பிரதோஷம், கிருத்திகை, அமாவாசை, தமிழ்புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ நாட்களில் மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அது மட்டுமின்றி கோவில் பகுதிகளில் ஆண்டுதோறும் அரசு சார்பில் ஆடிப்பெருக்கு விழாவும் நடத்தப்படுகிறது.

மேலும் கோவிலுக்கு வரும் வழியில் படகு இல்லம், சிறுவர் பூங்கா, நீச்சல்குளம், திருமூர்த்தி அணை உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன. இதனால் பொழுதுபோக்கு அம்சங்களை பார்வையிடவும் அணைப்பகுதியில் புகைப்படம் எடுத்து மகிழவும், மலைமீதுள்ள பஞ்சலிங்க அருவியில் விழும் மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காகவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வந்து செல்கின்றனர்.

இதனால் சிறந்த சுற்றுலா தலமாகவும் மற்றும் ஆன்மிக தலமாக உடுமலை பகுதி திருமூர்த்திமலை விளங்கி வருகிறது. அந்த வகையில் நேற்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்வதற்காகவும் மும்மூர்த்திகளை தரிசனம் செய்வதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருமூர்த்திமலைக்கு வந்து குவிந்தனர். இதன் காரணமாக பஞ்சலிங்க அருவி பகுதியில் காலை முதலே அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகளும் அய்யப்ப பக்தர்களும் வரிசையில் காத்திருந்து அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். அத்துடன் குடும்பத்துடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அதன் பின்னர் அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் மற்றும் அருவி பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

மேலும் தனியார் வாகனங்கள் உடுமலை திருமூர்த்திமலை சாலையை முழுவதுமாக ஆக்கிரமித்து கொண்டதால் கோவில் வரையிலும் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதையடுத்து பயணிகள் அனைவரும் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பு பெருமாள் கோவில் அருகே இறக்கிவிடப்பட்டனர்.

இதன் காரணமாக பொதுமக்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சாமி தரிசனத்திற்காக நீண்ட தூரம் நடந்து சென்றனர். ஒவ்வொரு முறையும் விசேஷ நாட்களின் போது அரசு பஸ்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அலைக்கழிக்கப் படுவது தொடர்கதையாக இருந்து வருவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் நேற்று ஏராளமான வாகனங்கள் திருமூர்த்திமலைக்கு வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து தளி போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

Next Story