கடனை திருப்பி கொடுக்க தாமதம்: திருப்பூரில் தொழிலாளி அடித்துக்கொலை - 2 பேரை போலீஸ் தேடுகிறது


கடனை திருப்பி கொடுக்க தாமதம்: திருப்பூரில் தொழிலாளி அடித்துக்கொலை - 2 பேரை போலீஸ் தேடுகிறது
x
தினத்தந்தி 1 Jan 2020 10:00 PM GMT (Updated: 1 Jan 2020 8:23 PM GMT)

திருப்பூரில் ரூ.10 ஆயிரம் கடனை திருப்பி கொடுக்க தாமதம் செய்த தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர்,

திருப்பூர்-ஊத்துக்குளி ரோடு பவானி நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 37). பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இதனால் சுரேஷ் தனது தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பாத்திமா கனி என்பவரிடம் தனது குடும்ப தேவைக்காக சுரேஷ் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் கடனை பலமுறை பாத்திமா கனி திருப்பி கேட்டு வந்துள்ளார். ஆனால் சுரேஷ் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். மேலும், பாத்திமா கனியை தகாத வார்த்தைகளால் சுரேஷ் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பாத்திமா கனி தனது அக்காவின் கணவரான எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அப்துல் காதரிடம் (45) கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை அப்துல் காதரும், அவரின் நண்பருமான நாகராஜ் (40) என்பவரும் சேர்ந்து கோல்டன்நகர் பகுதியில் இருந்த சுரேசிடம் ரூ.10 ஆயிரம் கடனை திருப்பி கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அப்துல்காதர் மற்றும் நாகராஜ் ஆகிய 2 பேரும் சேர்ந்து சுரேசை கைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சுரேஷ் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சுரேஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இதில் தொடர்புடைய அப்துல்காதர், நாகராஜ் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர். 

Next Story