ஆங்கில புத்தாண்டையொட்டி திருச்சி கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்


ஆங்கில புத்தாண்டையொட்டி திருச்சி கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 1 Jan 2020 10:45 PM GMT (Updated: 1 Jan 2020 8:25 PM GMT)

ஆங்கில புத்தாண்டையொட்டி திருச்சி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி,

2019-ம் ஆண்டு முடிந்து 2020-ம் ஆண்டு பிறந்து உள்ளது. ஆங்கில புத்தாண்டு பிறப்பை கிறிஸ்தவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி பூஜைகளுடன் கொண்டாடினார்கள். புத்தாண்டு பிறந்ததும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். புத்தாண்டையொட்டி திருச்சி கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருச்சி மலைக்கோட்ைட தாயுமானவர் சாமி கோவில் மாணிக்க விநாயகர் சன்னதியில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அய்யப்பன் கோவில்

திருச்சி கண்ேடான்மெண்ட் அய்யப்பன் கோவிலில் நேற்று காலை வழக்கம் போல் நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்படுவதற்கு முன்பாகவே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். நடை திறக்கப்பட்டதும் அவர்கள் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையாக வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா வரை நின்றனர். பக்தர்கள் வந்த வாகனங்கள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால் வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் இருந்து எம்.ஜி.ஆர். சிலை வரை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போலீசார் அங்கு நின்று போக்குவரத்தை சரி செய்தனர். இதே போல் சமயபுரம் மாரியம்மன் கோவிலில், நேற்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புத்தாண்டையொட்டி திரளான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்துசென்றனர். அவர்கள் கோவிலின் முன்புறம் சூடம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும், நெய்தீபம் ஏற்றியும் வணங்கினர்.

சாய்பாபா கோவில்

இதுபோல், மேக்குடி சாய்பாபா கோவிலில் நேற்று புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் அதிகாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தனகாப்பு அலங்காரம், தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. திருநாராயணபுரம் வேதநாராயணப்பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பாராயணம் நடைபெற்றது. தொட்டியம் அனலாடீஸ்வரர் கோவில், அய்யப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு லட்டும், 1 ரூபாய் நாணயமும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

மேலும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில், சமயபுரம் அருகே உள்ள போஜீஸ்வரர் கோவில், மாகாளிக்குடி உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில், முக்தீஸ்வரர் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில். திருப்பைஞ்சீலி நீலி வனநாதர் கோவில், மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி கோவில், காமாட்சி அம்மன் கோவில், என்று பல்வேறு கோவில்களில் காலை முதலே திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டையொட்டி சாமிதரிசனம் செய்ய வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. மேலும் ஜங்ஷன் வழிவிடுவேல் முருகன் கோவில் உள்ளிட்ட சாலையோர கோவில்களிலும் வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இருந்தது.


Next Story