கடனை வசூலிக்க விஜய் மல்லையாவின் சொத்துகளை வங்கிகள் பயன்படுத்தலாம் சிறப்பு கோர்ட்டு அனுமதி
தொழில் அதிபர் விஜய் மல்லையா வாங்கிய கடனை வசூலிக்க அவரது அசையும் சொத்துகளை வங்கிகள் பயன் படுத்திக் கொள்ளலாம் என மும்பை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மும்பை,
தொழில் அதிபர் விஜய் மல்லையா பாரத ஸ்டேட் வங்கி உள்பட பல வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டார். தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ள விஜய் மல்லையா தற்போது லண்டனில் இருக்கிறார். அவரை, இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே விஜய் மல்லையா வங்கிகளுக்கு தர வேண்டிய ரூ.6 ஆயிரம் கோடியை திரும்ப பெறுவதற்கு, அவரது சொத்துகளை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான 15 வங்கிகளின் கூட்டமைப்பு மும்பையில் உள்ள பணமோசடி தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன.
சொத்துகளை பயன்படுத்த அனுமதி
நேற்று அந்த மனு மீதான விசாரணை சிறப்பு கோர்ட்டில் நடந்தது. அப்போது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்ட விஜய் மல்லையாவின் அசையும் சொத்துகளை அவர் வாங்கிய கடன்களை வசூலிக்க வங்கிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.
அதே நேரத்தில் விஜய் மல்லையா சார்பில் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக வருகிற 18-ந் தேதி வரை அவரது சொத்துகளை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story