காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்தது தெரிந்தால் பால்தாக்கரே சொர்க்கத்தில் அழுது கொண்டு இருப்பார் சிவசேனா மீது பட்னாவிஸ் தாக்கு
காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது தெரிந்தால், பால்தாக்கரே சொர்க்கத்தில் அழுது கொண்டு இருப்பார் என சிவசேனாவை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தாக்கினார்.
மும்பை,
பால்கர் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் அந்த மாவட்டத்திற்குட்பட்ட 8 பஞ்சாயத்து சமிதிகளுக்கு வருகிற 7-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். நேற்று அங்கு பாரதீய ஜனதா சார்பில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மராட்டிய சட்டசபை தேர்தலில் மக்கள் பாரதீய ஜனதா , சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்க தான் வாக்களித்தனர். பாரதீய ஜனதா போட்டியிட்ட 70 சதவீத இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து.
ஆனால் சிவசேனா தான் போட்டியிட 45 சதவீத இடங்களில் தான் வெற்றி பெற முடிந்தது.
துரதிருஷ்டவசமாக தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்த சிவசேனாவின் துரோகத்தால் பாரதீய ஜனதா அதிகாரத்தில் இருந்து வெளியே இருக்கிறது. வாக்களித்த மக்களுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் சிவசேனா துரோகம் இழைத்து விட்டது.
பால்தாக்கரே அழுவார்
இந்துத்வா சித்தாந்தவாதி வீர சாவர்க்கரை அவமதிப்பவர்களுடன் சிவசேனா சமரசம் செய்து கொண்டது துரதிருஷ்டவசமானது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா கைகோர்த்து இருப்பதை அறிந்தால் பால்தாக்கரே சொர்க்கத்தில் அழுது கொண்டு இருப்பார்.
சிவசேனா தலைமையில் ஆட்சி அமைந்த நாளில் இருந்து 3 கட்சிகளிலும் மந்திரிகளின் பெயர்களை தீர்மானிக்க முடியவில்லை. மந்திரிகளை தேர்ந்தெடுத்ததில் சிவசேனா தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தங்களது சொந்த கட்சி அலுவலகத்தையே அடித்து நொறுக்கி உள்ளனர்.
மோதலுக்கு மத்தியில் இந்த அரசாங்கம் எத்தனை நாட்கள் நீடிக்குமோ?. சிவசேனா தலைமையிலான மராட்டிய அரசாங்கத்தை மும்பையின் மாதோஸ்ரீ (உத்தவ் தாக்கரே இல்லம்) கட்டுப்படுத்தாது. டெல்லியின் மாதோஸ்ரீ (சோனியாகாந்தி) தான் கட்டுப்படுத்துவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story