‘டிரான்ஸ்பார்மரில்’ பழுது பார்க்கும் பணி: மின்சாரம் தாக்கி 2 ஊழியர்கள் பலி - புத்தாண்டு தினத்தில் சோகம்
சென்னை சவுகார்பேட்டையில் ‘டிரான்ஸ்பார்மரில்’ பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 ஊழியர்கள், மின்சாரம் தாக்கி பலியானார்கள். புத்தாண்டு தினத்தில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது.
சென்னை,
சென்னையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மழை பெய்து ஓய்ந்த பின்னரும், சவுகார்பேட்டை பகுதியில் மின்சாரம் வரவில்லை என சவுகார்பேட்டை (கிழக்கு) துணை மின் நிலையத்துக்கு புகார்கள் குவிந்தது.
இதையடுத்து மின் இணைப்பை சரி செய்ய சவுகார்பேட்டை துணை மின் நிலையத்தில் பணிபுரியும் உதயா (வயது 45), வின்சென்ட்(40) ஆகிய மின் ஊழியர்கள் சென்றனர். ஆவுடையப்பா நாயக்கர் தெருவில் உள்ள ‘டிரான்ஸ்பார்மரில்’ இருவரும் பழுது பார்த்தனர். வின்சென்ட் மேலே ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்தார். உதயா கீழே இருந்தபடி அவருக்கு உதவி செய்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக வின்சென்ட் மீது மின்சாரம் பாய்ந்தது. வின்சென்ட் மேலே துடிப்பதை கண்ட உதயா அவரை மீட்பதற்காக ‘டிரான்ஸ்பார்மர்’ மீது ஏறினார். அப்போது உதயா மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதேவேளையில் வின்சென்ட் ‘டிரான்ஸ்பார்மரின்’ மேலே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த கொத்தவால்சாவடி போலீசார், வின்சென்டின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகளுக்கும், தீயணைப்பு படையினருக்கும் போலீசார் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் ஐகோர்ட்டு தீயணைப்பு படையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ‘டிரான்ஸ்பார்மருக்கு’ வரும் அனைத்து மின் இணைப்பையும் துண்டித்தனர். பின்னர் தீயணைப்பு படையினர் மேலே இருந்த வின்சென்டின் உடலை கீழே இறக்கினர். பின்னர் பலியான இருவரது உடல்களையும் மீட்ட போலீசார் பிரேதபரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கொத்தவால்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு தினத்தில் மின்சார ஊழியர்கள் இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
* ஓட்டேரியில் நடந்து சென்ற மனோஜ்குமார்(வயது 21), அவருடைய நண்பர்கள் வெங்கட் மற்றும் சிவா ஆகியோரிடம் மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி விலை உயர்ந்த 3 செல்போன்களை பறித்துச்சென்றனர்.
* குமணன்சாவடி அருகே சாலையை கடந்து செல்ல முயன்ற ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முகமது மோடி (45) ஆட்டோ மோதி பலியானார்.
* சென்னீர்குப்பம் மின்வாரிய அலுவலகம் அருகே நடந்து சென்றபோது ஆட்டோ மோதியதில் பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியை சேர்ந்த ராஜகோபாலன்(70) உயிரிழந்தார்.
Related Tags :
Next Story