ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் அதிகாலையில் பக்தர்கள் தரிசனம் - லட்சக்கணக்கான பேர் திரண்டனர்


ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் அதிகாலையில் பக்தர்கள் தரிசனம் - லட்சக்கணக்கான பேர் திரண்டனர்
x
தினத்தந்தி 2 Jan 2020 3:30 AM IST (Updated: 2 Jan 2020 2:22 AM IST)
t-max-icont-min-icon

பனியையும் பொருட்படுத்தாது, ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னையில் உள்ள கோவில்களில் நேற்று அதிகாலை முதல் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை,

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. புத்தாண்டையொட்டி முக்கிய கோவில்களில் நேற்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டது.

கோவில்களில் அதிகாலையில் பனியை பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் திரண்டனர். பக்தர்களின் வசதிக்கான சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

சென்னை, தியாகராயநகரில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் வெங்கடேச பெருமாள் கோவிலில் புத்தாண்டு பிறப்பையொட்டி நேற்று அதிகாலை 2.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு 40 ஆயிரம் லட்டு மற்றும் மலர், குங்குமம், துளசி பிரசாதங்களும் வழங்கப்பட்டன. சராசரியாக 1 லட்சம் பக்தர்கள் பனியையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி, பாங்காங் மற்றும் ஹாங்காங் நாடுகளில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் 1 டன் (ஆயிரம் கிலோ) மந்தாரை மலர் (ஆர்கிட் மலர்) கொண்டு வரப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

விழா ஏற்பாடுகளை உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி, துணைத்தலைவர் ஆனந்தகுமார் ரெட்டி, உறுப்பினர்கள் பி.வி.ஆர்.கிருஷ்ணாராவ், கார்த்திகேயன் உள்பட பலர் செய்து இருந்தனர்.

வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்க நாணய கவச அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு பகல் 12 மணி வரை முருகன் அருள்பாலித்தார். தொடர்ந்து பகல் 1 மணியில் இருந்து மாலை 4 மணி வரை தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 5 மணியில் இருந்து இரவு 10 மணி வரை சந்தன காப்பு மற்றும் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் தரிசனத்துக்காக சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.

சுமார் 1 லட்சம் பக்தர்கள் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், செயல் அலுவலர் கே.சித்ரா தேவி ஆகியோர் செய்து இருந்தனர்.

புத்தாண்டு பிறப்பையொட்டி மயிலாப்பூர் சாயிபாபா கோவிலில் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்ட சங்காபிஷேகம் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். சீரடியில் நடப்பது போன்று 5 ஆரத்திகள் மற்றும் மகாதீபாரதணை சாயிபாபாவுக்கு நடந்தது.

சாயிபாபா தங்க சிம்மாசனத்தில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் முழுவதும் சுமார் 2 டன் அளவில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நாள் முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. சுமார் 1 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை அகில இந்திய சாய் சமாஜம் குழு தலைவர் கே.தங்கராஜ், செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் செய்து இருந்தனர்.

ஆங்கிலப்புத்தாண்டு என்று இல்லாமல் மார்கழி மாதம் என்பதால் மயிலாப்பூர் கபாலீசுவரர்கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கபாலீசுவரர் சாமி மற்றும் கற்பகம்பாளுக்கு அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடந்தது. அதிகாலையிலேயே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை இணை-ஆணையர் காவேரி உள்பட பலர் செய்து இருந்தனர்.

மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவில் காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 4.45 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு காலை பூஜையும் நடந்தது தொடர்ந்து பகல் 12 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 5 மணியில் இருந்து இரவு 9 மணி வரை தரிசனத்துக்காக கோவில் நடை திறந்து இருந்தது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேற்கு சைதாப்பேட்டை, ஜெயராம் செட்டி தெருவில் உள்ள கடும்பாடி சின்னம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில் முன்மண்டபத்தில் காய்கறிகள், கனிகள், மளிகை பொருட்கள், நோட்டு புத்தகங்கள் போன்ற பொருட்களால் அமைக்கப்பட்டு இருந்து ‘நிறைமணிக்காட்சி’ பக்த ர்களை வெகுவாக கவர்ந்தது.

விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ஏ.கெஜபதி உள்பட பலர் செய்து இருந்தனர். இதுதவிர சென்னையில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

Next Story