சேலம் மாவட்டத்தில் 2 ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்


சேலம் மாவட்டத்தில் 2 ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்
x
தினத்தந்தி 2 Jan 2020 3:45 AM IST (Updated: 2 Jan 2020 3:05 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 2 ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு உள்ளது.

ஓமலூர்,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 3 மாவட்ட கவுன்சிலர் பதவி, 27 ஒன்றிய கவுன்சிலர் பதவி, 33 ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவி, மற்றும் 320 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் முதல் கட்டமாக கடந்த 27-ந் தேதி நடைபெற்றது. இதில் 3 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 22 பேரும், 27 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 145 பேரும் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். அதேபோல் 33 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 174 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

6 பேர் போட்டி

இதில் கடந்த 27-ந்தேதி வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தலும் நடந்தது. இதில் சாந்தி, கண்ணன், விஜயா, ராஜாகவுண்டர், ராஜேந்திரன், மாரியப்பன் ஆகிய 6 பேர் போட்டியிட்டனர். இவர்கள் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இருந்த வாக்காளர் அட்டை எண்ணை குறிப்பிட்டு விண்ணப்பம் செய்ததாக தெரிகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்தநிலையில் துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 6 பேரில் ராஜாகவுண்டர் பெயர் இடம்பெறவில்லை. இந்தநிலையில் வாக்குப்பதிவு முடிவுற்று ஓட்டுப்பெட்டிகள் பத்மவாணி மகளிர் கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளன. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் நேற்று வாக்காளர் பட்டியலில் வேட்பாளர் பெயர் இல்லாத வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது:-

வெள்ளக்கல்பட்டியில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் அனைத்தும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் வாக்குச்சீட்டு தனித்தனியே பிரிக்கப்படும். தலைவர் பதவிக்கான வாக்குச்சீட்டுகள் மட்டும் மீண்டும் பெட்டியில் வைத்து சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். மற்ற வார்டு உறுப்பினர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் வாக்குகள் எண்ணப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நவப்பட்டி ஊராட்சி

கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நவப்பட்டி ஊராட்சி. நடந்து முடிந்த முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் இந்த ஊராட்சி தலைவர் பதவிக்கு கல்பனா, காளியம்மாள், இந்திரா, மலர்கொடி, ஈஸ்வரி, காந்திமதி, சுதா ஆகிய 7 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 6,452 வாக்காளர்கள் கொண்ட இந்த ஊராட்சியில் 73 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற இருந்த நிலையில் நேற்று கொளத்தூர் தேர்தல் அலுவலர் செல்வராஜ் நவப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 7 பேரையும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அழைத்து இருந்தார். அப்போது மலர்கொடி என்பவரது பெயர் வாக்காளர் பிற்சேர்க்கை பெயர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் அந்த ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தார். இதனால் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களின் ஆதரவாளர்கள் அங்கு கூடினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.


Next Story