காவலன் ரோந்து வாகனம் - போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


காவலன் ரோந்து வாகனம் - போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 2 Jan 2020 3:30 AM IST (Updated: 2 Jan 2020 3:17 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் காவலன் செயலி மூலம் வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அனைத்து போலீஸ் நிலையங்களிலும் காவலன் ரோந்து வாகனங்களை போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் காவலன் எஸ்.ஓ.எஸ். செயலிக்கு வரும் புகார்கள் மீது உடனுக்குடன் சென்று நடவடிக்கை எடுப்பதற்காக போலீஸ் ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. காவலன் செயலியை அழைத்து பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் தொடர்பாக தகவலை பெற்று இந்த ரோந்து வாகனத்தில் போலீசார் உடனுக்குடன் சென்று நிலையை விசாரித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

இந்த ரோந்து வாகனங்களின் தொடக்க விழா ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவரெத்தினம் ஆகியோர் ரோந்து வாகனங்களை தொடங்கி வைத்னர்.

நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் கூறியதாவது:- அன்றாட வாழ்க்கையில் பொதுமக்களுக்கு நிகழும் குற்றசெயல்கள், வழிப்பறி, கடத்தல், தொந்தரவுகள்குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள், முதியோர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவைகளுக்கு அவசர அழைப்பிற்காக காவலன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த காவலன் செயலி தவிர, ஹலோ போலீஸ், ராமநாதபுரம் மாவட்ட சிறப்பு செல்போன் அழைப்பு சேவை, காவல்கட்டுப்பாட்டு அறை முதலியவற்றில் வரும் தகவல்கள் மற்றும் புகார்களை பெற்று உடனுக்குடன் சென்று நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் இந்த ரோந்து வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தகவல் கிடைத்த அடுத்த நொடியே புறப்பட்டு சென்று சம்பவ இடத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். இதற்கேற்ப நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் வாகனம் மூலம் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஜி.பி.எஸ். கருவியில் மேற்கண்ட ரோந்து வாகனங்கள் கண்காணிக்கப்படும். உரிய நேரத்தில் சம்பவ இடத்திற்கு சென்று தக்க நடவடிக்கை எடுக்காமல் தவறு செய்யும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுவாக தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் முதியவர்கள், குழந்தைகள்தான் அதிகஅளவில் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காகவே இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோன்றவர்களை காப்பாற்றி காவல்துறையால் தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்வதற்கு இந்த வாகனங்கள் பயன் உள்ளதாக இருக்கும். 24 மணி நேரமும் இந்த ரோந்து வாகனம் செயல்பாட்டில் இருக்கும் இந்த வாகனங்களை சுழற்சி அடிப்படையில் போலீசார் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவ்வாறு கூறினார்.

நிகழ்ச்சியில், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரிட்டோ, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜேசுதாஸ், செந்தில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story