அரக்கோணம் அருகே, தண்டவாளத்தில் திடீர் விரிசல்; 8 ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம் - பயணிகள் கடும் அவதி


அரக்கோணம் அருகே, தண்டவாளத்தில் திடீர் விரிசல்; 8 ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம் - பயணிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 2 Jan 2020 10:15 PM GMT (Updated: 2 Jan 2020 3:49 PM GMT)

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் 8 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

அரக்கோணம், 

காட்பாடியில் இருந்து அரக்கோணம் செல்லும் ரெயில் மார்க்கத்தில் நேற்று அதிகாலை ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். மகேந்திரவாடி- சித்தேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே அதிகாலை 4.10 மணிக்கு பராமரிப்பு பணியில் இருந்தபோது எல்.சி.கேட் 36 (லெவல் கிராசிங் கேட்) தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை பார்த்தனர். உடனடியாக அங்கிருந்த கேட்மேன் சஞ்சீவிகுமாரிடம் தெரிவித்தனர்.

இதுகுறித்து சஞ்சீவிகுமார் காட்பாடி, அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அதிகாரிகள் உடனடியாக அந்த வழியாக சென்று கொண்டு இருந்த ஆலப்புழையில் இருந்து சென்னை செல்லும் ஆலப்புழை எக்ஸ்பிரஸ், பழனியில் இருந்து சென்னை செல்லும் பழனி எக்ஸ்பிரஸ், கோவையில் இருந்து சென்னை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், பெங்களூருவில் இருந்து கவுகாத்தி செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் உள்பட 8 எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது.

ரெயில்கள் திடீரென நடுவழியில் நிறுத்தப்பட்டதால் ரெயிலில் இருந்த பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் கேட்டனர். தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால் ரெயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள், பயணிகளிடம் தெரிவித்தனர்.

அரக்கோணம், காட்பாடி ரெயில் நிலையங்களில் இருந்து ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் தண்டவாள விரிசல் ஏற்பட்ட இடத்திற்கு சென்று சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாலை 5.50 மணிக்கு சரிசெய்து முடித்தனர். அதன்பின்னர் நடுவழியில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 40 நிமிடம் முதல் 75 நிமிட காலதாமதமாக ஒவ்வொன்றாக சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.

எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் ரெயிலில் பயணம் செய்த பயணிகள் குறித்த நேரத்தில் சென்னை சென்று தாங்கள் செல்ல வேண்டிய வடமாநிலங்களுக்கான ரெயிலை பிடிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

தண்டவாள விரிசல் குறித்து காட்பாடி, அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயில்வே போலீசார், ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தண்டவாள விரிசல் குறித்த தகவலை சரியான நேரத்தில் அதிகாரிகளுக்கு தெரிவித்த சஞ்சீவிகுமாரை ரெயில்வே அதிகாரிகள் பாராட்டினார்கள்.

Next Story