தாளவாடி அருகே, ரோட்டில் விளையாடிய 2 சிறுத்தைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்


தாளவாடி அருகே, ரோட்டில் விளையாடிய 2 சிறுத்தைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
x
தினத்தந்தி 2 Jan 2020 10:15 PM GMT (Updated: 2020-01-02T22:21:06+05:30)

தாளவாடி அருகே ரோட்டில் 2 சிறுத்தைகள் விளையாடின. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

தாளவாடி, 

தாளவாடி மலைப்பகுதி தமிழக-கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது. தாளவாடி வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன.

இந்த வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி வருகின்றன. அவ்வாறு வரும் வனவிலங்குகள் ரோட்டில் அங்கும் இங்குமாக சுற்றித்திரிகிறது. சில நேரம் நடுரோட்டில் நின்று கொள்கிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

தாளவாடி அருகே தமிழக-கர்நாடக மாநில எல்லையில் ஒண்ணள்ளி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு செல்லும் சாலை வழியாக நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் சரக்கு வாகனத்தில் ஒருவர் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது சற்று தூரத்தில் 2 சிறுத்தைகள் ரோட்டில் விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்தார். இதனால் பயந்துபோன அவர் வாகனத்தை நிறுத்தினார். பின்னர் வாகனத்தில் இருந்தபடியே தனது செல்போனில் சிறுத்தைகள் விளையாடும் காட்சியை வீடியோ எடுத்தார்.

சிறிது நேரம் கழித்து 2 சிறுத்தைகளும் அங்கிருந்து சென்றன. அதன்பின்னரே அவர் அங்கிருந்து சென்றார். சிறுத்தைகள் விளையாடுவதை தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இது வைரலாக பரவி வருகிறது.

சிறுத்தை நடமாட்டம் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

Next Story