ஈரோடு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புடன் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை


ஈரோடு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புடன் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை
x
தினத்தந்தி 2 Jan 2020 10:30 PM GMT (Updated: 2 Jan 2020 4:56 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புடன் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் 19 மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர், 183 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 225 ஊராட்சி மன்ற தலைவர், 2 ஆயிரத்து 97 கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் என 2 ஆயிரத்து 524 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு (2019) டிசம்பர் மாதம் 9-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 8 ஆயிரத்து 277 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 134 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 997 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். 19-ந் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் ஈரோடு மாவட்டத்தில் 8 கிராம ஊராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வு பெற்றனர். இதுபோல் 407 கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர்களும் போட்டியின்றி தேர்வு பெற்றனர். 4 கிராம ஊராட்சி வார்டுகளுக்கு யாரும் வேட்புமனு செய்யவில்லை. எனவே மாவட்ட ஊராட்சிக்குழு, ஒன்றியக்குழு ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து பதவிகளுக்கும், 217 கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 1,686 கிராம வார்டு கவுன்சிலர் பதவிகள் என 2 ஆயிரத்து 105 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.

இந்த பதவிகளுக்கு மொத்தம் 6 ஆயிரத்து 731 பேர் போட்டியில் இருந்தனர். மாவட்ட ஊராட்சி, ஒன்றியக்குழு பதவிகளுக்கு அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள், தி.மு.க. கூட்டணி கட்சிகள், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கிராம ஊராட்சிகளில் கட்சி சார்பு வேட்பாளர்களும் சுயேச்சை சின்னங்களில் போட்டியிட்டனர்.

27-ந் தேதி முதல் கட்டமாக ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபி, நம்பியூர், டி.என்.பாளையம், தாளவாடி ஆகிய 7 ஒன்றியங்களுக்கு தேர்தல் நடந்தது. 30-ந் தேதி பவானி, அம்மாபேட்டை, அந்தியூர், சத்தியமங்கலம், பவானிசாகர், பெருந்துறை, சென்னிமலை ஆகிய 7 ஒன்றியங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டது. வாக்குச்சீட்டு முறையில் இந்த தேர்தல் நடத்தப்பட்டது. வாக்காளர்கள் தலா 4 ஓட்டுகளை பதிவு செய்தனர்.

இரட்டை கவுன்சிலர் வார்டுகளில் உள்ள வாக்காளர்கள் 5 ஓட்டுகள் போட்டனர். முதல் கட்டமாக 95 ஊராட்சிகளில் 894 வார்டுகளுக்கு 657 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடந்தது. 2-ம் கட்டமாக 130 ஊராட்சிகளில் 1,203 வார்டுகளுக்கு 919 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடத்தப்பட்டது.

முதல் கட்ட தேர்தலில் 76.21 சதவீதம் வாக்குகளும், 2-ம் கட்ட தேர்தலில் 78.56 சதவீத வாக்குகளும் பதிவாகின. மாவட்டத்தில் 14 ஒன்றியங்களிலும் மொத்தம் 77.55 சதவீதம் பேர் ஓட்டு போட்டு இருந்தனர். வாக்குப்பெட்டிகள் அனைத்தும், அந்தந்த ஒன்றிய அளவில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நேற்று வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. காலை 7 மணிக்கு முன்னதாகவே வாக்கு எண்ணிக்கை அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வந்தனர். அவர்கள் அனுமதிக்கப்பட்ட பொருளை தவிர வேறு பொருட்கள் எடுத்து வந்து உள்ளனரா? என்ற சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். காலை 8 மணிக்கு வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறை திறக்கப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்புடன் தொடங்கியது.

ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட எலவமலை, கதிரம்பட்டி, பிச்சாண்டம்பாளையம், கூரபாளையம், பேரோடு, மேட்டுநாசுவம்பாளையம் ஆகிய 6 ஊராட்சிகளிலும் பதிவான வாக்கு எண்ணிக்கை சித்தோடு வாசவி கல்லூரியில் நடந்தது.

ஈரோடு ஒன்றிய தேர்தல் நடத்தும் அதிகாரி சிவசங்கர் தலைமையில் அதிகாரிகள் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைமுறைகளை தொடங்கினார்கள். ஈரோடு ஒன்றியத்தில் முதலில் எலவமலை ஊராட்சியில் உள்ள 11 வார்டுகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. எனவே அந்த ஊராட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பபட்டனர்.

காலை 8 மணிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி சிவசங்கர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறையில் இருந்து சீல் எடுக்கப்பட்டது. பின்னர் அருகில் உள்ள வாக்குச்சீட்டு பிரிக்கும் அறைக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. அங்கு வாக்குச்சாவடி எண் வரிசைப்படி பெட்டிகள் வைக்கப்பட்டன. அதிகாரிகள் ஓட்டுப்பெட்டிகளை முகவர்கள் முன்னிலையில் பிரித்தார்கள்.

சாக்குப்பை, துணிப்பை, கெட்டியான பாலித்தீன் பை என 3 பைகளுக்குள் இருந்து ஓட்டுப்பெட்டி வெளியே எடுக்கப்பட்டது. பின்னர் பெட்டியின் சீல் எடுக்கப்பட்டு பெட்டி திறக்கப்பட்டது. ஓட்டுச்சீட்டுகள் முழுமையாக ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் கொட்டப்பட்டது. பின்னர் முகவர்கள் முன்னிலையில் வாக்குச்சீட்டு பிரிக்கப்பட்டது.

வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை, மஞ்சள் நிற வாக்குச்சீட்டுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன. இந்த பணிகள் 10 மணிக்கு நிறைவடைந்து, சீட்டுகள் அனைத்தும் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு வார்டு வாரியாக வாக்குகள் பிரித்தும், சின்னம் வாரியாக பிரித்தும் சீட்டுகளை கட்டினார்கள். அதன் பிறகே எண்ணிக்கை தொடங்கியது. இதுபோல் ஒவ்வொன்றாக 5 சுற்றுகள் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை பணியை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பார்வையிட்டார். வாக்குப்பெட்டி அறை, வாக்கு எண்ணும் அறை, பணியாளர்களுக்கான சமையல் கூடம் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேலிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டு அறிந்ததுடன் சில ஆலோசனைகளும் வழங்கினார். இதுபோல் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி அதிகாரிகளுக்கும் கலெக்டர் ஆலோசனைகள் வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய கலெக்டர் சி.கதிரவன், ‘ஈரோடு மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் குறிப்பிட்ட நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விட்டது. ஊராட்சி வாரியாக வாக்குகள் எண்ணப்படுவதால், அந்த நேரத்தில் மட்டுமே முகவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடக்கிறது’, என்றார்.

ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளர் கே.விவேகானந்தன் வாக்கு எண்ணிக்கை மையத்தை பார்வையிட்டார். அவர் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

வாக்கு எண்ணிக்கையையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. முகவர் அடையாள அட்டை வைத்திருந்தவர்கள், வேட்பாளர்கள் மட்டுமே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஒரு ஊராட்சிக்கான எண்ணிக்கை நடக்கும்போது அதைச்சார்ந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அதிக நெரிசல் இன்றி வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடந்தது. ஈரோடு ஒன்றியத்துக்கு 5 சுற்றுகள் எண்ணிக்கை நடந்தது.

ஈரோடு ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு பதவி 1, ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவி 6, கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவி 6, கிராம வார்டு பதவிகள் 63 உள்ளன. இதில் கதிரம்பட்டி, பிச்சாண்டாம்பாளையம் ஆகிய 2 கிராம ஊராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதுபோல் கூரபாளையம் ஊராட்சியில் 9 வார்டுகளில் 7 பேர் கவுன்சிலர்களாக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.

கதிரம்பட்டி ஊராட்சியில் 9 வார்டுகளில் 7 பேரும், பிச்சாண்டாம்பாளையம் ஊராட்சி 9 வார்டுகளில் 3 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். எலவமலை ஊராட்சியில் 12 வார்டுகளில் 2 பேரும், பேரோடு ஊராட்சியில் 9 வார்டுகளில் 3 பேரும் கவுன்சிலர்களாக தேர்ந்து எடுக்கப்பட்டனர். மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கும் கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டி நிலவியது.

ஈரோடு ஒன்றியத்தை பொறுத்தவரை மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க., நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் சார்பில் 4 வேட்பாளர்களும், ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு 26 பேரும், 4 கிராம ஊராட்சி பதவிகளுக்கு 16 பேரும், 41 கிராம ஊராட்சி கவுன்சிலருக்கு 110 பேரும் போட்டியில் இருந்தனர்.

வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி பெறுபவர்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் 6-ந் தேதி பதவி ஏற்கிறார்கள். 4-ந் தேதியுடன் (நாளை) தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வருகின்றன. ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி மன்றங்களின் துணைத்தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல் 11-ந் தேதி நடக்கிறது.

Next Story