திருவண்ணாமலையில், வாக்குப்பெட்டி திறந்து கிடந்ததால் தி.மு.க.வினர் போராட்டம்


திருவண்ணாமலையில், வாக்குப்பெட்டி திறந்து கிடந்ததால் தி.மு.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 3 Jan 2020 3:45 AM IST (Updated: 2 Jan 2020 10:46 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் வாக்குப்பெட்டி திறந்து கிடந்ததால் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 18 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு பதிவான வாக்குகள் திருவண்ணாமலை டேனி‌‌ஷ்மி‌‌ஷன் பள்ளியில் எண்ணப்பட்டது. இதற்காக காலையில் இருந்தே வாக்கு எண்ணும் அதிகாரிகள், வாக்காளர்கள் மற்றும் வாக்காளர்களின் முகவர்கள் வந்தனர்.

வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறையின் முன்பு ஒரு வாக்குப்பெட்டி திறந்து கிடந்தது. இதனை கண்டதும் தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர்.

வாக்குப்பெட்டிகளை யாராவது திறந்து வைத்தார்களா? என்று சந்தேகம் ஏற்பட்டது. வாக்குப்பெட்டி திறந்து கிடந்ததற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பிய தி.மு.க.வினர் வாக்கு எண்ணும் மையத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோ‌‌ஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் நடத்தும் அலுவலர் கதிர்சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் அலுவலர்கள் தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது திறந்து கிடந்த வாக்குப்பெட்டி மாதிரி வாக்கு எண்ணிக்கைக்காக கொண்டு வரப்பட்டது என்றும், வாக்குப்பெட்டி எப்படி திறக்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்க கொண்டு வரப்பட்டிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து தி.மு.க.வினர் போராட்டத்தை கைவிட்டனர்.

இதையடுத்து வாக்கு எண்ணிக்கைக்கான பணிகள் தொடங்கியது.

Next Story