மணிகண்டம் அருகே பிளஸ்-1 மாணவி கொலை கற்பழிக்கப்பட்டாரா? போலீசார் விசாரணை


மணிகண்டம் அருகே பிளஸ்-1 மாணவி கொலை கற்பழிக்கப்பட்டாரா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 2 Jan 2020 10:15 PM GMT (Updated: 2020-01-02T22:53:56+05:30)

மணிகண்டம் அருகே பிளஸ்-1 மாணவி கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணிகண்டம்,

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே வடக்கு நாகமங்கலத்தில் உள்ள காட்டுப்பகுதியில் ஒரு சிறுமி கைகள் மற்றும் வாய் துணியால் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அந்த பகுதியினர் மணிகண்டம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுமியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த சிறுமிக்கு சுமார் 15 வயது இருக்கலாம் என்று தெரியவந்தது.

பிளஸ்-1 மாணவி

இதையடுத்து சமீபத்தில் காணாமல் போனவர்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, பிளஸ்-1 மாணவி காணாமல் போனதாக மணிகண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் அந்த மாணவியின் பெற்றோரை அழைத்து, இறந்து கிடந்த சிறுமியின் உடலை காண்பித்தனர். அப்போது, இறந்து கிடந்தவர் அவர்களது மகள் என்பது தெரியவந்தது.

மேலும் அவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்ததும் தெரியவந்தது. அந்த மாணவியின் கைகள், வாய் துணியால் கட்டப்பட்டும், ஆடைகள் களைந்தும் இருந்ததால் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதற்கிடையே மாணவி இறந்து கிடந்த இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

காதலனுக்கு தொடர்பா?

முதல் கட்ட விசாரணையில், அந்த மாணவி இனாம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்த மதி என்ற வாலிபரை காதலித்தது தெரியவந்தது. மேலும் அந்த வாலிபருக்கும், கொலைக்கும் தொடர்பு உள்ளதா? என்பதை கண்டறிய, அந்த வாலிபரை பிடித்து விசாரித்தால் தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்னரே மாணவி எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரியவரும்.

Next Story