நெல்லை கண்ணன் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும் - வைகோ பேட்டி
நெல்லை கண்ணன் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று வைகோ கூறினார். நெல்லையில் நேற்று நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நெல்லை,
அரசியல் புதிய, புதிய வடிவங்களை எடுத்துக் கொண்டிருக்கிறது. தற்போது கோலப்போட்டியில் வந்து நிற்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, தங்களது உரிமைகளை தெரிவிக்க சகோதரிகள் கோலம் போட்டனர். அதில் அவர்களை கைது செய்ய முயற்சி செய்வது, வழக்குப்போடுவது கண்டிக்கத்தக்கது. கருத்து சுதந்திரம் அடியோடு அழிக்கப்படும் நிலையில் பாசிச ஆட்சி இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டிருப்பதும் அதன் அடையாளம்தான். நகைச்சுவையாக பேசுகிறபோது, நமது பகுதிகளில் உலவுகிற பழமொழிகளை எல்லாம் சொல்வது நெல்லை கண்ணனுக்கு வழக்கம். அவர் ஒரு சிறந்த ஆன்மிக சொற்பொழிவாளர், இலக்கிய சொற்பொழிவாளர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது வருத்தத்தை தருகிறது. அரசு அந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
நெல்லை கண்ணன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் போலீசார் மேலும் 2 பிரிவுகளை சேர்த்து இருப்பது கொடுமை. அவர் திட்டமிட்டு பேசவில்லை. அந்த நோக்கத்திலும் பேசவில்லை. வழக்கமாக நமது பகுதிகளில் பேசுகிற சாதாரண பேச்சாக பேசி உள்ளார். அதற்கு இவ்வளவு கொடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டபோது துன்புறுத்தப்பட்டு இருந்தால் வேதனைக்கு உரியது ஆகும். அவர் உடல் நலம் குறைந்தவர், சிகிச்சைப்பெற்று வருகிறார். அவரிடம் மனிதாபிமானத்துடன் நடந்து இருக்க வேண்டும். நெல்லையில் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கவிடாமல் செயல்பட்டது மனசாட்சியே இல்லாத செயல். சிகிச்சைக்கு செல்பவருக்கு உதவிதான் செய்ய வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறினார்.
பேட்டியின்போது நெல்லை மாநகர மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் நிஜாம், புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story