ஒரத்தநாடு அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் மர்ம சாவு போலீசார் விசாரணை


ஒரத்தநாடு அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் மர்ம சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 3 Jan 2020 3:45 AM IST (Updated: 3 Jan 2020 1:13 AM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாடு அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் மர்மமான முறையில் இறந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது52). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிபக்கழக பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சேகர் கண்ணந்தங்குடி பகுதியில் உள்ள ஒரு புளிய மரத்தில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். நேற்று காலை அந்த பகுதிக்கு கால்நடைகளை மேய்க்க சென்றவர்கள், சேகர் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

கொலையா? தற்கொலையா?

இதுகுறித்து ஒரத்தநாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சேகரின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சேகர் எப்படி இறந்தார்? தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெட்ரோல் பங்க் ஊழியர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story