வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகள் இருந்த அறையை திறக்க காலதாமதம் வேட்பாளர்கள் சாலை மறியல்


வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகள் இருந்த அறையை திறக்க காலதாமதம் வேட்பாளர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 Jan 2020 4:30 AM IST (Updated: 3 Jan 2020 1:23 AM IST)
t-max-icont-min-icon

திருவரங்குளம் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகள் இருந்த அறையை திறக்க காலதாமதம் ஆனதால் வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவரங்குளம்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல், கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, குன்றாண்டார்கோவில், புதுக்கோட்டை, விராலிமலை ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாக கடந்த 27-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையார்கோவில், மணமேல்குடி, பொன்னமராவதி, திருமயம், திருவரங்குளம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு கடந்த 30-ந் தேதி 2-ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றியங்களில் பதிவான வாக்குப்பெட்டிகள் அந்தந்த ஒன்றியங்களில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதேபோல திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த வாக்குப்பெட்டிகள் திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கைக்குறிச்சியில் உள்ள பாரதி கல்வியியல் கல்லூரியிலும் வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் நேற்று காலையில் கைக்குறிச்சியில் இருந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்ற அதிகாரிகள், திருவரங்குளத்தில் இருந்த வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்த அறையின் சாவியையும் எடுத்து சென்று விட்டனர்.

சாலை மறியல்

இதனால் திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குப்பெட்டிகள் இருந்த அறையை திறக்க காலதாமதம் ஆனது. தொடர்ந்து நேற்று காலை 10 மணி வரை வாக்குப்பெட்டிகள் இருந்த அறை திறக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் உடனடியாக வாக்குப்பெட்டிகள் இருந்த அறையை திறந்து வாக்குகளை எண்ணக்கோரி திருவரங்குளத்தில் இருந்து ஆலங்குடி செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கைக்குறிச்சியில் இருந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு அதிகாரிகள் சென்று சாவியை பெற்று வந்து, திருவரங்குளத்தில் உள்ள மையத்தில் உள்ள வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ள அறையை திறந்தனர். அதைத்தொடர்ந்து வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்றது.


Next Story