சேலம் அருகே பயங்கரம்: மூதாட்டி அடித்துக்கொலை


சேலம் அருகே பயங்கரம்: மூதாட்டி அடித்துக்கொலை
x
தினத்தந்தி 2 Jan 2020 10:45 PM GMT (Updated: 2 Jan 2020 8:22 PM GMT)

சேலம் அருகே வீட்டில் தனியாக தூங்கிய மூதாட்டியை மர்ம நபர் அடித்துக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஆட்டையாம்பட்டி, 

சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி பூக்கார செல்லப்பன் தெருவை சேர்ந்தவர் பார்வதி (வயது 75). இவருடைய கணவர் கந்தசாமி ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு மணிவண்ணன் (56), ரவிச்சந்திரன்(50), சீனிவாசன்(48) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. இவர்கள் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தனியாக வசித்து வந்த பார்வதி தினமும் கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வந்தார். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

நேற்று காலையில் வெகுநேரமாகியும் பார்வதி வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு பார்வதி பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது பற்றி அவரது மகன்கள் மற்றும் உறவினர்களுக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். மேலும் ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த வீட்டில் பணம், நகைகள் ஏதேனும் திருட்டு போய் உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த 15 பவுன் நகை திருட்டு போய் உள்ளதாக உறவினர்கள் கூறியதாக தெரிகிறது. அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் பார்வதியை தவிர வேறு யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குள் புகுந்து திருட பதுங்கி இருக்கலாம். அவர் திருடும் போது, மூதாட்டி விழித்து கொண்டிருக்கலாம் எனவும், அதிர்ச்சி அடைந்த அந்த மர்ம நபர், மூதாட்டி தன்னை அடையாளம் கண்டுகொண்டு வெளியே காட்டி கொடுத்து விடுவார்? என்று பயந்து மூதாட்டியை அடித்துக்கொலை செய்து இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.

மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story