மதிய உணவு வழங்காததை கண்டித்து, திண்டுக்கல்லில் வாக்கு எண்ணும் பணியை புறக்கணித்து அலுவலர்கள் வெளிநடப்பு


மதிய உணவு வழங்காததை கண்டித்து, திண்டுக்கல்லில் வாக்கு எண்ணும் பணியை புறக்கணித்து அலுவலர்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 3 Jan 2020 3:45 AM IST (Updated: 3 Jan 2020 1:54 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், மதிய உணவு வழங்காததை கண்டித்து வாக்கு எண்ணும் பணியை புறக்கணித்து அலுவலர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது பெண் அலுவலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள், திண்டுக்கல் எம்.வி.எம் அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டது. இதற்காக 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்கு எண்ணும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர். இதையொட்டி வாக்கு எண்ணும் அலுவலர்கள் நேற்று காலை 6 மணிக்கே வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்தனர்.

அதேநேரம் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன் மற்றும் தண்ணீர் பாட்டில் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் வாக்கு எண்ணும் அலுவலர்கள் தண்ணீர் பாட்டில் கூட கொண்டு வராமல் பணிக்கு வந்தனர். மேலும் அவர்களது செல்போன்கள் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து காலை 8 மணிக்கு அவர்களுக்கு காலை உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. அப்போது முறையாக உணவு பொட்டலங்கள் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு சிலருக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. அதேபோல் பாதுகாப்புக்காக வந்த போலீசாருக்கும் தண்ணீர் வழங்கப்படவில்லை.

இதனால் வாக்கு எண்ணும் அலுவலர்கள் மற்றும் போலீசார், வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடித்து குடிக்கும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையே மதியம் 2.30 மணி அளவில் வாக்கு எண்ணும் அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அதில் ஒரு சிலருக்கு மட்டுமே மதிய உணவு வழங்கப்பட்டது. பெரும்பாலான அலுவலர்களுக்கு மதிய உணவு வழங்கப்படவில்லை.

இதனால் விடுபட்ட அலுவலர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் மதிய உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாலை 3.30 மணி வரை மதிய உணவு வழங்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததால் வாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. மேலும் வாக்கு எண்ணும் பணியை புறக்கணித்த அலுவலர்கள் நுழைவு வாயில் நோக்கி சென்றனர்.

இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன் மற்றும் அதிகாரிகள் வெளியே வந்து அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதிய உணவு, குடிநீர் வழங்கவில்லை என்றும், வாக்கு எண்ணும் மையத்தில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லை என்றும் அலுவலர்கள் தங்களது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தனர். மேலும் வீட்டுக்கு சென்று சாப்பிட்டு விட்டு பணிக்கு வருவதாக சில அலுவலர்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.

அப்போது ஒரு பெண் அலுவலர் மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்த சக பெண் அலுவலர்கள் அவரை தாங்கிப் பிடித்துக்கொண்டு அழைத்து சென்றனர். இதற்கிடையே வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு மதிய உணவு கொண்டு வரப்பட்டது இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணும் அலுவலர்கள் போராட்டத்தை கைவிட்டு மதிய உணவை பெற்றுக்கொண்டு சாப்பிட சென்றனர்.

இதனிடையே 10-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவு வாயில் பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்குள்ள போலீசாரிடம், ஓட்டலுக்கு சென்று சாப்பிட வேண்டும் என்று கூறிய அவர்கள், நுழைவு வாயில் கேட்டை திறக்கும்படி கூறினர். ஆனால் போலீசார் கேட்டை திறக்க மறுத்துவிட்டனர். பின்னர் நுழைவு வாயிலிலேயே அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் சமாதானம் அடைந்து மதிய உணவை வாங்கி சாப்பிட்டனர். பின்னர் வாக்கு எண்ணும் பணியை அலுவலர்கள் தொடங்கினர். அதேநேரம் அலுவலர்களின் போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் வாக்கு எண்ணிக்கை பாதிக்கப்பட்டது. மதிய உணவு வழங்காததை கண்டித்து வாக்கு எண்ணும் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story