விருப்பப்பட்ட ஆலைகளுக்கு, கரும்புகளை கொண்டு செல்ல தடையில்லா சான்று - விழுப்புரம் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்


விருப்பப்பட்ட ஆலைகளுக்கு, கரும்புகளை கொண்டு செல்ல தடையில்லா சான்று - விழுப்புரம் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Jan 2020 3:30 AM IST (Updated: 3 Jan 2020 1:54 AM IST)
t-max-icont-min-icon

விருப்பப்பட்ட ஆலை களுக்கு கரும்புகளை அரவைக்கு கொண்டு செல்ல நிரந்தர தடையில்லா சான்று அளிக்க வேண்டும் என்று விழுப்புரம் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

விழுப்புரம், 

விக்கிரவாண்டி தாலுகாவிற்குட்பட்ட கரும்பு விவசாயிகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருது தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கரும்பு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலெக்டரிடம் அனுப்பி வைத்தனர்.

அதன் பிறகு அவர்கள், மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் முண்டியம்பாக்கத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு பல ஆண்டுகளாக கரும்புகளை வெட்டி சப்ளை செய்து வருகிறோம். கடந்த 4 ஆண்டுகளாக கரும்புக்கு உரிய பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை. கடந்த 2017, 2018-ம் ஆண்டிற்கான கரும்பு வெட்டி அனுப்பியதற்கான முழு தொகையையும் தராமல் எங்களை ஆலை நிர்வாகத்தினர் ஏமாற்றி விட்டனர். இதனால் எங்கள் குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது.

இருப்பினும் நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் கரும்பை பயிர் செய்து தற்போது அரவைக்கு தயார் நிலையில் வைத்துள்ளோம். ஏற்கனவே எங்களுக்கு முண்டியம்பாக்கம் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் நிலுவைத்தொகை தர வேண்டியுள்ளதால் எங்கள் கரும்பை அந்த ஆலைக்கு வெட்டி அனுப்புவதற்கு எங்களுக்கு சம்மதம் இல்லை.

எங்களில் ஒரு சில விவசாயிகள் மதுராந்தகத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை சப்ளை செய்த நிலையில் வெட்டி அனுப்பிய கரும்புகளை அரைக்க வேண்டாம் என்று முண்டியம்பாக்கம் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தி கரும்புகளை வாகனத்தோடு காயவைத்து விட்டனர். மேலும் கரும்பு தோட்டத்திலும் வெட்டிய கரும்புகள் காய்ந்து கொண்டு வருகிறது. இதனால் பெரும் ந‌‌ஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் முண்டியம்பாக்கம் தனியார் ஆலை நிர்வாகத்தினர், அவர்கள் பகுதியில் கரும்பு எடுப்பதை விட்டுவிட்டு பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் உள்ள விவசாயிகளிடம் பேசி கரும்புகளை அரவைக்கு எடுத்து வருகின்றனர். இவ்வாறாக அவர்கள் சட்டவிரோதமாக கரும்புகளை அரவைக்கு எடுத்து வருகின்றனர். ஆனால் விவசாயிகளாகிய எங்களை மட்டும் வெளி ஆலைக்கு கரும்புகளை எடுத்துச்செல்ல தடை செய்கின்றனர்.

இதுபற்றி ஏற்கனவே தங்களிடம் முறையிட்டோம். அதற்கு ஆலை நிர்வாகத்தினர், கடந்த மாதம் 31-ந் தேதிக்குள் கரும்பு நிலுவைத்தொகை முழுவதையும் தருவதாக கூறினர். ஆனால் எங்களுக்கு நிலுவைத்தொகை முழுவதையும் வழங்கவில்லை. எனவே கரும்பு நிலுவைத்தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எங்களுடைய கரும்புகளை நாங்கள் விருப்பப்பட்ட ஆலைக்கு கொண்டு செல்ல நிரந்தர தடையில்லா சான்று அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Next Story